24 special

ஆட்சிக்கு சிக்கல் உண்டாகும் நிலையில் பதற்றத்துடன் களத்தில் இறங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்!

Stalin
Stalin

தமிழகத்தில் ராணுவ வீரர் கொலை பல்வேறு மாவட்டங்களில் பதற்றம் இனியும் இதே நிலை நீடித்தால் திமுக ஆட்சிக்கு சிக்கல் உண்டாகும் என்பதால் முதல்வரே நேரடியாக களத்தில் இறங்கி இருப்பது தெரியவந்து இருக்கிறது.


தமிழகத்தில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 10 கொலைகள், நகைக்கடை, ஏடிஎம் என 2 பெரிய இடங்களில் கைவரிசை, கஞ்சா புழக்கம், பல்வேறு இடங்களில் செயின் அறுப்பு, செல்போன் பறிப்பு தொடர்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம், சென்னை நகைக்கடை கொள்ளை சம்பவம் போன்ற குற்றங்களில் இதுவரை குற்றவாளிகளின் துப்பு கிடைக்காமல் காவல்துறை திண்டாடி வருகிறது, போதாக்குறைக்கு கோவை கோர்ட் வளாகத்தில் நடைபெற்ற கொலை சம்பவம் வேறு காவல்துறையினர் மீதுள்ள மக்களின் நம்பிக்கையை அசைத்துள்ளது.

இந்ந நிலையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சராமரியாக அடுக்கி ஆளும் திமுக அரசை கடுமையாக சாடி வருகின்றன. ஈரோடு இடைத்தேர்தல் வேறு நடப்பதால் ஆளும்கட்சி தரப்பில் இதற்கெல்லாம் பதில்கூற வேண்டும் என்ற கட்டாயம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில்தான் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் நடத்தியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு போலீஸ் பிரிவு பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் சேலம் மண்டலம் சார்பாக நேற்று ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. சேலம் சென்று உள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்று இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். ஒரு முதல்வரே மண்டல காவல்துறையினர் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்வது கடந்த 25 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் இதுவே முதல்முறை.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 4வது மாடியில் உள்ள கூடத்தில் இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த ஆய்வு கூட்டத்தில்  சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் கலந்து கொண்டார். சரக டி.ஐ.ஜி, 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர். மேலும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொண்டனர். இவர்கள் எல்லோரும் சேலம் மண்டலத்திற்கு கீழ் வரும் சட்டம் ஒழுங்கு கண்காணிப்பில் உள்ளவர்கள்.

இவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சுமார் 1 மணி நேரம் நேற்று ஆய்வு நடத்தியுள்ளார். இந்த ஆய்வு கூட்டத்தில் தொடக்கத்தில் இருந்து முதல்வர் கண்டிப்புடன் பேசியதாகவும் மாவட்ட தலைநகரங்கள், நகராட்சிகள், சிறு பகுதிகளில் கூட கண்காணிப்பை பலப்படுத்துங்கள் என உத்தரவிட்டதாக தெரிகிறது. 

மேலும் இந்த ஆய்வு கூட்டத்திலு சேலம் மண்டலத்தின் பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள் எனவும், ரோந்து பணிகளை இரவு நேரங்களில் தீவிரப்படுத்துங்கள் எனவும் குறிப்பாக க்ரைம் அதிகம் நடக்க வாய்ப்புள்ள  ஏடிஎம்கள், கோவில்கள், மசூதிகள், சர்ச் போன்ற மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளாராம்.

கலவரங்கள் ஏற்படா வண்ணம் கவனிப்புடன் இருங்கள் எனவும் முக்கிய பிரச்சனைகளை உடனே என்னுடைய கவனத்திற்கு கொண்டு வாருங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கண்டிப்புடன் கூறியுள்ளார். 

இது மட்டுமில்லாமல் ரவுடிகள் மோதல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இவை அனைத்தையும் முதல்வர் கண்டிப்புடன் பேசியதாக கூறப்படுகிறது. 

சேலத்தில் நடந்த சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டம் போல் விரைவில் மற்ற மண்டலங்களிலும் ஆய்வு கூட்டங்கள் நடக்கும் என்று அரசு தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.