
இந்தியா இப்போது பேசிக்கொண்டிருக்கும் நாடாக இல்லை; மாறாக, தன் நாட்டின் இறையாண்மைக்கு யாராவது சவால் விடுத்தால் அவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் துணிச்சலையும் கொண்டிருக்கிறது என்பதை அண்மைய நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களின் சமீபத்திய கனடா பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக நிலவி வந்த ராஜதந்திர சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இந்த கனடா பயணம் ‘நிழல் உலகக் கும்பல்’ மற்றும் ஒருங்கிணைந்த குற்றச்செயல்களில் ஈடுபடும் நெட்வொர்க்குகளுக்கு ஒரு பலத்த அடியாக அமைந்துள்ளது
பஞ்சாப் மாநிலத்தின் பாதுகாப்பில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் கனடாவிலிருந்து செயல்படும் குற்ற கும்பல்களின் தாக்கம் உள்ளது. கடந்த காலங்களில் பஞ்சாபில் நடந்த பல இலக்கு வைக்கப்பட்ட கொலைகள் கனடாவிலிருந்து வரும் உத்தரவுகளின் பேரிலேயே நடந்ததாகப் புலனாய்வு துறையினரால் கூறுகிறார்கள். தற்போது கனடா அரசுடன் ‘தொடர்பு அதிகாரிகள்’ நியமிக்கப்படுவது மற்றும் பாதுகாப்பு குறித்த முறையான பணி திட்டம் வகுக்கப்படுவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், கனடா மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் வன்முறை அமைப்புகளுக்கு வழங்கப்படும் மறைமுக ஆதரவுகள் தடுக்கப்பட வாய்ப்புள்ளது.
சர்வதேச அரசியலில் ஒரு நாட்டின் பொருளாதார வலிமை அதிகரிக்கும் போது, அதன் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகளும் உலக நாடுகளால் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. இந்தியா மற்றும் கனடா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசப்பட்டு வரும் நிலையில், “வணிகம் செய்ய வேண்டுமென்றால் உங்கள் நாட்டில் செயல்படும் காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிபந்தனை வலுவாக முன்வைக்கப்படுகிறது. கனடா பிரதமர் விரைவில் இந்தியா வரவுள்ள சூழலில், இந்த தனிநாட்டு கொள்கையுடைய அமைப்புகளைக் கட்டுப்படுத்துவது கனடாவுக்கு ஒரு கட்டாயமாக மாறியுள்ளது.
இது வெறும் இந்தியாவுக்கான உதவி மட்டுமல்ல, கனடாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கும் இது மிகவும் அவசியமாகும். அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சில தீவிரவாத கும்பல்களுக்குத் தொடர்பு இருப்பது சமீபத்திய சோதனைகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக ‘பெண்டானில்’ போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுத கடத்தல் மூலம் கிடைக்கும் பணம், சட்டவிரோத குடியேற்றங்களுக்கும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வட அமெரிக்காவில் கடந்த சில மாதங்களில் பிடிபட்ட பல குற்றவாளிகள் இத்தகைய தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்களாக இருப்பது கனடா அரசுக்கும் ஒரு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நீண்டகாலமாகவே பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் மற்றும் அராஜகவாதிகளுக்குப் புகலிடம் அளித்து வருவதாக விமர்சனங்கள் உள்ளன. இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளின் குற்றவாளிகள் கூட ஜனநாயகத்தின் பெயரால் அங்கே தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால், தற்போது கனடாவில் நிலவும் உள்நாட்டு குழப்பங்கள் மற்றும் வன்முறை அந்த நாட்டின் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதால், மற்ற நாடுகளின் இறையாண்மையை மதிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவின் உள்நாட்டில் குழப்பம் விளைவிப்பது இறுதியில் உலகப் பொருளாதாரத்தையும், அதன் மூலம் கனடாவின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதை அந்த நாடு தற்போது உணர தொடங்கியுள்ளது. ஒரே நாளில் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது என்றாலும், இந்த கட்டுப்படுத்துதல் கொள்கை ஒரு நல்ல ஆரம்பமாகும். இந்தியாவைத் தனிமைப்படுத்த நினைத்த காலம் போய், இன்று இந்தியாவுடன் பொருளாதார ரீதியாக இணைந்திருப்பதுதான் தங்களுக்கு லாபம் என்பதை மேற்கு நாடுகள் புரிந்து கொண்டுள்ளன. அஜித் தோவல் அவர்களின் இந்த அதிரடி விஜயம், குற்றவாளி கும்பல்களை ஒடுக்குவதோடு மட்டுமல்லாமல், ஒரு வலுவான இந்தியாவின் குரலை உலக அரங்கில் மீண்டும் ஒலிக்கச் செய்துள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளில் ஒரு புதிய விடியலாகக் கருதப்படுகிறது.
