24 special

திமுகவினரின் அட்டகாசம்..!மாநில அரசு அதிகாரிகளையும் விட வில்லை

Senthil balaji,mk stalin
Senthil balaji,mk stalin

கரூரில் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த அதிர்வலைகள் அடங்கும் முன்பு அடுத்த பூகம்பம் கிளம்பி இருக்கிறது.


திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் செம்மண்ணை கடத்தி வெளியே விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஆர்.ஐ பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது.

இரவு நேரங்களில் தொடர்ந்து மணலை அள்ளி வெளியே விற்பனை செய்து வந்த நிலையில் இதனைத் தடுப்பதற்காக பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, நரசிங்கபுரம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் மற்றும் ஜேசிபி ஓனர் உள்ளிட்டோர் மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளில் திட்டி ஆர்.ஐ பிரபாகரனை கடுமையாக தாக்கியுள்ளனர்.  இதில் வருவாய் ஆய்வாளரின் மண்டை உடைந்தது.

இதுகுறித்து தகவலறிந்த நரசிங்கபுரம் ஊராட்சியின் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆர்.ஐ பிரபாகரனை மீட்டு ஆம்புலன்ஸ் வாயிலாக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சிகிச்சைப் பெற்ற பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன், ஜேசிபி ஓட்டுனர் மணிகிருஷ்ணன்,தனபால் உள்ளிட்ட 4 பேர் மீது ஆர்.ஐ பிரபாகரன் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் 4 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால்‌ ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.  இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் அரசு அதிகாரிகளான எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது , ஆளும் கட்சியினர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கிறார்கள், காவல் துறையில் புகார் கொடுத்தும் பயன் இல்லை, இதே போன்று தொடர்ச்சியாக நடந்தால் நாங்கள் வீதியில் இறங்க நேரிடும், அரசு அதிகாரிகள் நேர்மையாக செயல்படவில்லை என கூறுகிறார்கள் ஆனால் நேர்மையாக செயல்பட்டு மணல் கடத்தலை தடுத்தால் ஆளும் கட்சியினர் தாக்குகிறார்கள் என்ன நடக்கிறது தமிழகத்தில் என புலம்பி தவிக்கின்றனர் அரசு அதிகாரிகள்.

தமிழகத்தில் திமுகவினர் மத்திய வருமான வரித்துறை அரசு அதிகாரிகள் தொடங்கி மாநில அரசு அதிகாரிகள் என பலரும் தாக்குதலுக்கு உண்டான சம்பவம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.