24 special

நல்லா கவனியுங்க மக்களே...பிரஷாந்த் கிஷோரா? பானிபூரியா? வெளிச்சத்துக்கு வரும் பல உண்மை..!

prasanth kishore and paani poori
prasanth kishore and paani poori

ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழி வேண்டாம் என்ற கருத்து, தமிழகத்தில் மிக தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து பேசப்பட்டு வந்தாலும் மற்றொரு கேள்வியும் எழுந்து வருகின்றது. அப்படி என்றால் இலவசமாக அரசு பள்ளியில் கூடுதலாக ஒரு மொழியை அதாவது இந்தியை பயில ஒரு வாய்ப்பு ஏற்படும் போது, அதனை ஏன் தடுக்க வேண்டும்? மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல், மாணவர்களின் மொழித் திறனை ஏன் தடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.


இதற்கு காரணம், தாய்மொழி தமிழ் அழிந்துவிடும் என பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் உண்மை என்ன? தமிழகத்தை தவிர்த்து மற்ற அனைத்து மாநிலங்களிலும் இந்தி இருக்கின்றது. அப்படி என்றால் அந்தந்த மாநில மொழிகள் அழிந்து விட்டதா? என்ற கேள்வி எழுகிறது. இல்லை என்பது ஆணித்தரமான உண்மை. அதற்கு பதிலாக மற்ற மாநிலத்தவர்கள் மும்மொழிகளும் தெரிந்துக் கொள்வதால் அவர்கள் எந்த மாநிலத்திற்கும், எந்த நாட்டிற்கும் சென்று ஆளுமையான ஒரு பதவியில் அமர்ந்து வேலை செய்கின்றனர். 

ஆனால் பாருங்கள்.. மிகப் பெரிய படிப்பு படித்திருந்தாலும், மொழித்திறன் இல்லை என்றால் இரண்டாம், மூன்றாம் கட்ட இடத்தில் தான் நாம் வேலை செய்ய வேண்டி இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழைத் தூக்கிப் பிடிக்கிறோம் என்ற பெயரில், இந்தி எதிர்ப்பாளர்கள் தாங்கள் மட்டும் அனைத்து விதங்களிலும் வளர்ச்சி பெற்று பாமர மக்களின் குழந்தைகளின் எதிர்காலத்தில் விளையாடுகின்றனர். எப்படி என்றால், இன்று இந்தியை எதிர்க்க கூடிய அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் அவர்களின் மொழித்திறனை நினைத்துப்பாருங்கள். அவர்களுடைய பிள்ளைகளின் மொழித் திறனையும் நினைத்துப்பாருங்கள். அவர்கள் படிக்கும் பள்ளி, அங்கு பயிற்றுவிக்கும் ஆங்கில மொழி, பெரிய இடத்து சவகாசம், நாடு கடந்து வியாபாரம் என செல்லும் வாழ்க்கைமுறை அமோகமாக இருக்கும். 

ஆனால் பாருங்களேன்... சாதாரண பள்ளியில் ஆங்கில மீடியம் படித்தாலும், அரசு பள்ளியில் ஆங்கில மீடியம் படித்தாலும், முழுவதும் தமிழில் பயின்று ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டாலும் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி படிப்பையும் முடித்து வேலைக்கு என செல்லும்போது அவர்கள் சந்திக்கக்கூடிய இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.. மொழி தெரியாமல் அவமானங்கள் வேறு.... உயர் அதிகாரிகளுடனும், மற்ற மாநில அதிகாரிகள் வரும்போது தாங்கள் நினைத்த கருத்துக்களை கூட ஆங்கிலத்தில் மிகவும் எளிதாக எடுத்துக் கூற கூட முடியாத அளவுக்குத்தான் இருக்கும் நம் பிள்ளைகளின் திறன்.

அதுமட்டுமல்ல உயர் பதவி வரும் போது மொழித்திறன் இல்லாத ஒருவருக்கு எப்படி கொடுப்பது? திறமை இருக்கிறது ஆனால்... அனைவரிடத்திலும் பேசவேண்டும், மற்ற மொழி பேசுபவர்களையும் சமாளிக்க வேண்டும் இப்படி அனைத்து விதங்களிலும் கையாளும் திறன் கொண்டவராக இருந்தால் தானே உயர் பதவியில் அவரை அமர்த்த முடியும் என்பதால், படிப்பறிவு இருந்தும் மொழித்திறன் இல்லாததால் உயர் பதவியில் அமர்த்த முடிவதில்லை. 

இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள் மக்களே..... இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இணைப்பு மொழி தமிழ் என்று கூறுகின்றார். சந்தோஷம் கேட்பதற்கு. ஆனால் இவர் கடல் கடந்து சென்று துபாயில் அலுவலகம் திறந்து வைத்து வியாபாரத்தை பெருக்கி வருகிறார். இதற்கு தமிழை தான் இணைப்பு மொழியாக பயன்படுத்தினாரா ரகுமான்? அங்கு உள்ள ஷேக் உடன் ஆங்கிலம் பேசி இருப்பாரா உருது பேசி இருப்பாரா இந்தி பேசி இருப்பாரா? கேள்விகள் இப்படி வருமா அல்லது தமிழைத் தான் இணைப்பு மொழியாக பயன்படுத்தினார் என கூறுவோமா? இதனால் அவருக்கு லாபம். சாதாரண மக்களுக்கு என்ன லாபம்? அவர் பாட்டுக்கு போடுற இசையை தான் கேட்க முடியும்.

எதற்கெடுத்தாலும், இந்தி படித்தவன் இங்கு பானிபூரி விற்கிறான் என்கிறார்கள். அப்படி என்றால் அதே இந்திக்கார பிரசாந்த் கிஷோர் தான் தற்போது திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்க மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். இந்த இடத்தில் பானிபூரி விற்பவர்களை நாம் உதாரணமாக எடுத்துக்கொண்டு முன்னேறுவோமா அல்லது பிரசாந்த் கிஷோர் போன்றவரை... உதாரணமாக எடுத்துக்கொண்டு முன்னேறுவோமா?

இது ஒரு பக்கம்... பானிபூரி விற்பது என்பது ஒரு தொழில். எந்த விதத்திலும் குறைத்து எடை போடுவது மிகப்பெரிய தவறு. ஆனால் அத்தகைய பானி பூரியை தான், இங்கு இந்தியை எதிர்க்க எதிர்க்கக் கூடியவர்கள், மதுபானக் கடையில் ஒரு குவாட்டர் வாங்கி குடித்துவிட்டு பானி பூரியை வாங்கித் தின்றுவிட்டு மல்லாக்க ரோட்டில் விழுந்து கிடக்கின்றனர். அந்த குவாட்டர் வாங்குவதற்கும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

ஆனால் பாருங்கள்... இங்கு பானிபூரி விற்பவர்களை மதுபான கடையில் நீண்ட வரிசையில் பார்க்க முடியாது. அதற்கு மாறாக தமிழை மிக அழகாக கற்றுக்கொண்டு மிக அருமையாக வியாபாரம் செய்து, வட இந்தியாவில் வசிக்கக்கூடிய தங்களது குடும்பத்தை காப்பாற்ற இங்கிருந்து பணம் அனுப்புகின்றனர்.  இப்போது சொல்லுங்கள் பானி பூரியா?  பிரசாந்த் கிஷோரா? போலி போராளிகளா?