
உலக பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருக்கிறது, உலக சந்தைகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன, போர்கள், பதட்டங்கள், விநியோக சங்கிலி குழப்பங்கள்… இந்த எல்லாவற்றையும் கடந்து இந்தியா அமைதியாக, ஆனால் துல்லியமாக, ஒரு பொருளாதார அடி வைத்திருக்கிறது.கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, நவம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி வலிமையாக உயர்ந்துள்ளது. அக்டோபரில் 34 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி, நவம்பரில் நேராக 38.13 பில்லியன் டாலரைத் தொட்டது. உலக நாடுகளின் புருவத்தை உயர்த்தியுள்ளது.
அதே நேரத்தில், இந்தியாவை எப்போதும் இறக்குமதி சார்ந்த நாடு என்று விமர்சித்தவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது இந்தியா . அக்டோபரில் 76 பில்லியன் டாலராக இருந்த இறக்குமதி, நவம்பரில் 62.66 பில்லியன் டாலருக்கு சரிந்தது. இதன் விளைவாக, இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 41.68 பில்லியனில் இருந்து 24.53 பில்லியன் டாலராக கடுமையாகக் குறைந்தது. இது சரிவு அல்ல, இது கட்டுப்பாடு. இது தற்செயலான மாற்றம் அல்ல, இது திட்டமிட்ட நிர்வாகம்.
ஏற்றுமதி வளர்ச்சியில் முன்னணியில் இருந்தது பொறியியல் துறை. இயந்திரங்கள், வாகன உதிரிபாகங்கள், போக்குவரத்து சாதனங்கள் ஆகியவை இணைந்து, 11.01 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை பதிவு செய்தன. இதன் பின்னால் “மேக் இன் இந்தியா” என்ற வார்த்தை இல்லை, அதன் செயல்பாடு இருக்கிறது. இந்தியா இனி தயாரிப்பை பேசும் நாடு அல்ல, தயாரிப்பை உலகுக்கு அனுப்பும் நாடு.என முத்திரை பதித்துள்ளது.
மின்னணு துறையில் இந்தியா இன்னொரு மிகப்பெரிய படியை எடுத்துவைத்துள்ளது. கடந்த ஆண்டு 3.46 பில்லியனாக இருந்த மின்னணு ஏற்றுமதி, இப்போது 4.81 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மொபைல் போன்கள், உற்பத்தி முதலீடுகள், தொழில்நுட்ப கட்டமைப்பு— இவை அனைத்தும் சேர்ந்து இந்தியாவை சந்தை அல்ல, உற்பத்தி மையமாக மாற்றி வருகின்றன.
மருந்து துறை மீண்டும் தனது நிலைத்தன்மையை நிரூபித்துள்ளது. 2.61 பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்து ஏற்றுமதி, இந்திய மருந்துகள் மீது உலகம் வைத்திருக்கும் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இறக்குமதி பக்கத்திலும் இந்தியா தன்னை கட்டுப்படுத்தியுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் தணிந்ததும், சுத்திகரிப்பு நிலையங்கள் திட்டமிட்டு செயல்பட்ட காரணமாக, பெட்ரோலிய இறக்குமதி சீராகவே இருந்தது. இதுவே ஒட்டுமொத்த வர்த்தக பற்றாக்குறையை குறைக்க முக்கிய பங்கு வகித்தது.
அமெரிக்கா விதித்த வரிகளுக்குப் பிறகும், இந்திய ஏற்றுமதி சறுக்கவில்லை. மாறாக, இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களை மாற்றிக் கொண்டார்கள். மின்னணு மற்றும் மருந்து போன்ற வரிவிலக்கு துறைகள் மூலம் அமெரிக்க சந்தையில் இந்தியா தனது நிலையை வலுப்படுத்தியது. அதே நேரத்தில், ரத்தினங்கள், ஆபரணங்கள், கடல்சார் பொருட்கள் போன்ற துறைகள் சீனா, ஹாங்காங், வியட்நாம் போன்ற மாற்று சந்தைகளுக்கு தங்கள் பாதையை திருப்பின.
ஒரு சந்தை மூடப்பட்டால், இன்னொரு சந்தையைத் தேடிச் செல்லும் நாடு இந்தியா. ஒரு தடையை பார்த்தால், அதைக் கடக்கும் வழியை உருவாக்கும் நாடு இந்தியா. இதுதான் இந்தியாவின் பொருளாதார மனநிலை.நவம்பர் மாத தரவுகள் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்கின்றன. இந்தியாவின் வர்த்தக இயந்திரம் மீண்டும் சமநிலையைப் பெற்றுள்ளது. இது வெறும் எண்களின் விளையாட்டு அல்ல. இது தன்னம்பிக்கையின் சிக்னல். இது எதிர்காலத்துக்கான அறிவிப்பு.உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா அமைதியாக நகர்கிறது. ஆனால் நகரும் ஒவ்வொரு அடியும், உலக பொருளாதார ஆட்டத்தின் திசையையே மாற்றும் அளவுக்கு வலுவாக இருக்கிறது.
