
ஒரு தேசத்தின் ஆகச்சிறந்த முதலீடு என்பது அதன் குழந்தைகளின் கல்வியில்தான் அடங்கியிருக்கிறது. அதை வெறும் வார்த்தைகளாகக் கடந்து போகாமல், அட்சர சுத்தமாகச் செயலில் காட்டிக் கொண்டிருக்கிறது கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாநகராட்சி. கல்விக்கண் திறக்கும் புதிய கல்வியாண்டு தொடங்கும் இந்த வேளையில், திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக மேயர் வி.வி. ராஜேஷ் அவர்களின் தலைமையில் அங்கு அரங்கேறி வரும் ஒரு மனிதநேய முயற்சி, எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கனவை நனவாக்கும் பொருட்டு, அவர்களுக்குத் தேவையான பள்ளிப்பைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வாரி வழங்கும் மாநகராட்சியின் இந்த நற்செயல் உண்மையிலேயே மனமாறப் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்தத் திட்டத்தின் ஆகச்சிறந்த அழகும், ஆச்சரியமும் எங்கு ஒளிந்திருக்கிறது தெரியுமா? அரசாங்கத்தின் பொதுப் பணத்தில் இருந்தோ, மாநகராட்சியின் வரிப் பணத்தில் இருந்தோ இதற்காக ஒரு பைசா கூட செலவிடப்படவில்லை என்பதுதான் அது. இன்றைய அரசியல் மற்றும் நிர்வாகச் சூழலில், எல்லாவற்றிற்கும் அரசாங்க நிதி ஒதுக்கீட்டையே எதிர்பார்த்துக் காத்திராமல், பொதுமக்கள் மற்றும் பெருந்தன்மை கொண்ட நன்கொடையாளர்களின் பங்களிப்பை மட்டுமே கைகாட்டி, இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை சாத்தியமாக்கிக் காட்டியுள்ளார் மேயர் வி.வி. ராஜேஷ். தற்போதைய பொருளாதாரச் சூழலில் பள்ளிப் பொருட்கள், சீருடைகள் மற்றும் புத்தகங்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், தங்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கே போராடும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பப் பெற்றோருக்கு மாநகராட்சியின் இந்த உதவி, இக்கட்டான நேரத்தில் தேடிவந்த ஆகச்சிறந்த வரப்பிரசாதமாக, அவர்களின் தோள்களிலிருந்து ஒரு பெரும் சுமையைக் குறைக்கும் நிம்மதியாக அமைந்துள்ளது.
அதிகார வர்க்கம் என்பது குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து கொண்டு உத்தரவுகளைப் பிறப்பிக்கும் தளம் அல்ல, அது களத்தில் நின்று மக்களோடு மக்களாகப் பணியாற்றும் களம் என்பதை நிரூபிக்கும் காட்சிகள் தான் தற்போது திருவனந்தபுரம் மாநகராட்சியில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மேயரும், மாநகராட்சியின் உயர் அதிகாரிகளும் தங்களின் அலுவல் நேரங்களையும் கடந்து, நேரடியாகக் களத்தில் இறங்கி மாணவர்களுக்கான கல்விப் பொருட்களைத் தரம் பிரித்து, பைகளில் தொகுக்கும் (Packing) பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இவர்களின் இந்த அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பு காண்போரைக் நெகிழச் செய்கிறது. இவ்வாறு போர்க்கால அடிப்படையில் தயார் செய்யப்படும் இந்த விசேஷக் கல்வித் தொகுப்புகள், மிக விரைவில் அந்தந்த வார்டு கவுன்சிலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இடைத்தரகர்கள் எவருமின்றி ஒவ்வொரு வார்டிலும் உள்ள தகுதியான குழந்தைகளுக்கு நேரடியாகச் சென்றடைய உள்ளன.ஒரு நல்ல எண்ணத்தோடு தொடங்கப்படும் நற்செயல், என்றுமே தோற்பதில்லை என்பதற்கு இந்தத் திட்டமே மிகச் சிறந்த சான்றாகும்.
