
ஈரோட்டில் உள்ள பனகஹள்ளி கிராம மயானத்துக்கு, வக்ப் வாரியம் உரிமை கொண்டாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பாக போராட்டம் வெடித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பசவராஜு என்பவர் தாக்கல் செய்த மனு: மாவட்டத்தில் உள்ள பனகஹள்ளி, பாளையம் ஆகிய கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள சர்வே எண் 99/2 என்பது அரசு நிலம். இது, மயானம். ஹிந்துகளுக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த 1800ம் ஆண்டு முதல் மயானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தகுந்த ஆவணங்கள் இல்லாமல், தற்போது வக்ப் வாரியம் சொந்தம் கொண்டாடுகிறது.
எந்தவொரு விசாரணையும் நடத்தாமல், தாசில்தார் மற்றும் காவல்துறை உதவியுடன், கிராம மக்கள் மயானத்தை பயன்படுத்த முடியாதவாறு, வேலி அமைத்து உள்ளனர். மனு அளித்தும், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மயானத்தை மீட்டு, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி, மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ., உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்.என வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 29 ஆம் தேதி , நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் எஸ்.செந்தில்குமார் ஆஜராகி, ''கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக, கிராம மக்கள் மயானமாக பயன்படுத்துகின்றனர். அரசுக்கு சொந்தமான அந்த நிலத்தை, தகுந்த ஆவணங்கள் இல்லாமல், திடீரென வக்ப் வாரியம் சொந்தம் கொண்டாடுகிறது,'' என்றார்.இதைப் பதிவு செய்த நீதிபதி, இந்த மனுவுக்கு, ஈரோடு மாவட்ட கலெக்டர், கோவை வக்ப் வாரிய கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜன.22ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் தன் உத்தரவில், இந்த இடைப்பட்ட காலத்தில், கிராமத்தில் ஏதேனும் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் யாரேனும் உயிரிழந்தால், அந்த மரணம் தொடர்பாக, உடனே ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா தாசில்தாருக்கு தெரிவிக்க வேண்டும்.
அவர் உடனே நேரில் சென்றோ அல்லது அதிகாரி ஒருவரை அனுப்பியோ, மனுதாரரால் கோரப்பட்டபடி, உடலை அடக்கம், தகனம் செய்வதற்கான இடத்தை அடையாளம் காண வேண்டும்.விசாரணையில், அடையாளம் காணப்பட்ட இடத்தில், உடல்கள் பாரம்பரிய முறைப்படி அடக்கம் அல்லது தகனம் செய்யப்படுகிறது என்பது தெரியவந்தால், அதிகாரிகள் தங்கள் விசாரணைக்கு ஏற்ப, அந்தந்த இடங்களில் உடலை அடக்கம் செய்யப்படுவதையோ அல்லது தகனம் செய்யப்படுவதையோ உறுதி செய்ய வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே பயன்பாட்டில் இருந்து வந்த மயான இடத்திற்கு சொந்தம் கொண்டாடும் வகையில் வக்பு வாரியம் அமைத்த கம்பி வேலியை போட்டார்கள் சேதப்படுத்தியதாக ஏழு பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டரை கிராம மக்கள் சிறைபிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்று இரவு சிலர் கம்பி வேலியை உடைத்து சேதப்படுத்தியதுடன், சிசிடிவி கேமராக்களையும் நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதன் தொடர்பாக தாளவாடி போலீசார் வனகல்லி கிராமத்தைச் சேர்ந்த ஏழு பேரை நள்ளிரவில் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
மீண்டும் சிலரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல போலீசார் வந்தபோது, மலை கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீஸ் வாகனத்தை மறித்து, இன்ஸ்பெக்டரை கிராமத்திலேயே சிறைபிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எந்த ஆதாரமும் இன்றி ஏழு பேரை பிடித்து சென்றதாக குற்றம்சாட்டி, பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வருவாய் துறை மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் தாளவாடி மலை கிராமப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
