24 special

ஆள் யார் என்று தெரியாமல் கைவைத்த திமுகவினர் ...!அடுத்த நொடியே அரங்கேறிய திருப்பம்

Senthil balaji, gayathri
Senthil balaji, gayathri

கரூரில் நேற்று முதல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் நண்பர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் நேற்றைய தினம் சோதனை நடத்த வந்த பெண் வருமான வரித்துறை அதிகாரி மீது திமுகவினர் கைவைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கிய நிலையில், தற்போது யார் அந்த காயத்ரி என்ற தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.


அவர் நாட்டிற்காக தங்கம் வென்றவர் என்ற தகவல் திமுகவினருக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது,கரூர், கோவை, சென்னை என்று தமிழ்நாடு முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவர் தம்பி அசோக்குமார் தொடர்புடைய, 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர், சோதனை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில், கரூர் ராமகிருஷ்ணபுரத்திலுள்ள அசோக்குமார் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளச் சென்றபோது, அங்கு குவிந்த தி.மு.க தொண்டர்களுக்கும், அதிகாரிகளுக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தக் களேபரத்தில் பெண் அதிகாரி காயத்ரி தி.மு.க நிர்வாகி குமார் என்பவரால் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியானது.

மேலும், அதிகாரிகள் வந்த கார் ஒன்றின் கண்ணாடியும் தி.மு.க-வினரால் அடித்து உடைக்கப்பட்டது .இந்தக் களேபரங்களால், நடைபெறவிருந்த வருமான வரித்துறை சோதனையை நிறுத்திய அதிகாரிகள், கரூர் நகர காவல் நிலையம், கரூர் மாவட்ட எஸ்.பி ஆகியோரிடம் சென்று, பாதுகாப்புக் கேட்டு மனு அளித்தனர். சில வருமான வரித்துறை அதிகாரிகளும் எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். 

இதில், தி.மு.க-வினரால் தாக்கப்பட்ட  பெண் அதிகாரி காயத்ரி, தடகளத்தில் பல சாதனைகளைப் புரிந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது. அரியலூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக்கொண்ட காயத்ரி, ஏழ்மையான குடும்பப் பின்னணியைக்கொண்டவர். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தடகளப் போட்டிகளில் ஜொலிக்கத் தொடங்கியிருக்கிறார். படிப்பிலும் கெட்டிக்காரராகவே இருந்திருக்கிறார். பன்னிரண்டாம் வகுப்பில், 91 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

தடகளத்தைப் பொறுத்தமட்டில், 16 வயதினருக்கான தடை தாண்டுதலில் தங்கம், 2016-ம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டுதலில் தங்கம், 2008-ம் ஆண்டு புனேவில் நடைபெற்ற காமன்வெல்த் இளையோர் விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டுல், மும்முறைத் தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கம் வாங்கியிருக்கிறார்.

அதேபோல், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியவர், 100 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் இவரது பெஸ்ட் 13:59  விநாடிகளாகவும், மும்முறைத் தாண்டுதல் போட்டியில் இவரது பெஸ்ட் 13:48 விநாடிகளாகவும் பதிவாகியிருக்கிறது. இப்படி, தடகள விளையாட்டுப் போட்டி சாதனைகள் மூலம் ஏற்கெனவே ஊடகங்களில் அடிக்கடி செய்தியாக அவர் பெயர் வந்த நிலையில், தற்போது வருமான வரித்துறை அதிகாரியாக இருக்கும் காயத்ரி, கரூருக்குச் சோதனை நடத்த வந்த இடத்தில், தி.மு.கவினரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

நாட்டிற்காக பல்வேறு பதக்கங்களை வென்ற  வீர மங்கைக்கு இந்த நிலைமையா? உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என பலரும் இப்போது உள்துறை அமைச்சகத்தை வழியிறுத்தி வருவதால் செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மேலும் சிக்கலை உண்டாக்கி இருக்கிறது.