தமிழகத்தில் கள்ளசாராய மரணங்கள் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கும் சூழலில் தற்போது விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் தனபால் என்பவர் காவல்துறையினர் முன்னிலையில் பெண் வருவாய் வட்டாச்சியரை அவள் இவள் என ஒருமையில் பேசியதோடு, கை காலை வெட்டுவேன் என வெளிப்படையாக காவல்துறையினரை முன் வைத்து கொண்டு பேசிய சம்பவம் பெரும் கொந்தளிப்பை அரசு ஊழியர்கள் மத்தியில் உண்டாக்கி இருக்கிறது.
ஏற்கனவே மணல் திருட்டை தட்டி கேட்ட VAO கொலை செய்யப்பட்ட நிலையில் விசிக கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் பெண் வருவாய் வட்டாசியரை கை கால்களை வெட்டுவேன் என ஒருமையில் பேசி இருப்பதும், அருவருக்க தக்க வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
பெண் அதிகாரியை மிரட்டிய விசிக மாவட்ட செயலாளரை கைது செய்து முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே வைக்காமல் காவல்துறை அதிகாரிகள் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பது தமிழகத்தில் அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக இந்த விவகாரத்தை கண்டித்து இருக்கிறார், இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் திருமதி இந்திரா அவர்களை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தனபால் என்பவர், தகாத வார்த்தைகளால் பேசி, கை காலை வெட்டுவேன் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.
அனுமதி இல்லாமல் அமைத்த கொடிக் கம்பத்தை அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட பெண் வட்டாட்சியரை, காவல்துறை முன்னிலையில் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் தைரியம் எங்கிருந்து வந்தது?
திறனற்ற திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுவதும், மிரட்டப்படுவதும் தொடர்கிறது. நடப்பது மக்களுக்கான ஆட்சியா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சியா?
உடனடியாக, பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த நபர்களைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு அதிகாரிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் பெண் அதிகாரியை மிரட்டும் விசிக பிரமுகர் வீடியோ தற்போது வைரலாகும் நிலையில் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. தொடர்ச்சியாக விசிகவினர் மீது இது போன்ற பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்த நிலையிலும் கூட்டணி கட்சி என்பதால் திமுக அரசு மெத்தன போக்கை கடை பிடிக்கிறதா என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.
அரசு அதிகாரிக்கே தமிழகத்தில் இப்படி போலீசார் முன்னிலையில் கொலை மிரட்டல் விடுக்க படுகிறது என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன என கேள்வியை எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.