தமிழகத்தில் தொடர்ச்சியாக வருமான வரித்துறை சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மிக பெரிய அதிர்ச்சி தகவலை வருமான வரித்துறையின் நுண்ணறிவு பிரிவு கண்டறிந்து இருக்கிறது.மதிப்பீட்டை குறைத்துக்காட்டி பத்திரப்பதிவு நடைபெற்று வருவதாக புகார் எழுந்த நிலையில், தமிழ்நாடுமுழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பல பத்திரப்பதிவு அலுவலகங்களில் முறையாக கணக்கு காண்பிக்கப்படவில்லை என்பதும் பான், ஆதார் இல்லாமலேயே ரூ.30 லட்சம் மதிப்புக்கும் மேல் பத்திரப்பதிவு செய்யப்படுவதும் ஆய்வில் கண்டறியப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வருமான வரித்துறை நுண்ணறிவுத் துறை அதிகாரிகள் சென்னை செங்குன்றம் மற்றும் திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனைகளில் ஈடுபட்டனர். சென்னை சார்பதிவாளர் அலுவலகத்தில் 5 வருடத்திற்கு பிறகு கணக்கை ஒப்பிட்டு பார்த்ததில் கிட்டத்தட்ட ரூ.2000 கோடி ரூபாய் வரை கணக்கு காட்டாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. அதேபோல் திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1000 கோடி ரூபாய் கணக்கு காட்டாமல் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.30 லட்சத்திற்கு மேல் பணப்பரிவர்த்தனை உள்ள நிலப் பதிவுகளைக் கணக்கு காட்ட வேண்டும். அதனடிப்படையில் 5 வருடங்களுக்கு கணக்கு காட்டப்படாமல் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 5 வருடத்திற்கு முன்பு காட்டப்பட்ட கணக்கின் விபரங்கள் மற்றும் 5 வருடங்களுக்கு பின்பு காட்டப்பட்ட கணக்கின் விபரங்களை ஒப்பிட்டு பார்த்த போது இவ்விவரங்கள் தெரியவந்துள்ளது.
5 வருடத்திற்கு ஒருமுறை பணப்பறிமாற்றம், நிலப்பதிவு, அதுதொடர்பான விவரங்களை வருமான வரித்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளிடம் தகவல்களை தெரிவிக்க வேண்டும். இதற்கு முன்பு காட்டப்பட்ட கணக்கின் வரவு செலவு கணக்குகள், பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவுகள், நிலப்பதிவுகள் போன்றவற்றையும் அதிகாரிகள் ஒப்பிட்டு பார்ப்பார்கள். அதில் விளக்கங்களும் கேட்கப்படும். அப்போது சார்பதிவாளராக இருக்கும் அதிகாரிகள் சரியான விளக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கவில்லை எனில் அலுவலர்கள் மேல் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
திருச்சி உறையூரில் நேற்று காலை இருந்து இரவு வரை நடந்த சோதனையில் 7 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய நண்பர்கள் வீடுகளிலிலும் பல அரசு அதிகாரிகள் வீடுகளில் நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தில் செங்குன்றம் மற்றும் திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலங்களில் நடைபெற்ற சோதனைகள் பல்வேறு விவாத பொருளை உண்டாக்கி இருக்கிறது.
மொத்தம் 3 ஆயிரம் கோடியல்ல 5 ஆயிரம் கோடிக்கு மேல் தமிழகத்தில் கணக்கு காட்டாத நிலங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அது யார் யார் பெயரில் பதிவு ஆயிருக்கிறது என்று வருமான வரித்துறை ஆதாரங்களை கைப்பற்றி இருப்பதாகவும் அடுத்த கட்ட திருப்பங்கள் விரைவில் அரங்கேரும் என்று கூறப்படுதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு உண்டாகி இருக்கிறது.