24 special

இரு நாட்களாக வரும் செய்தி நல்லது இல்லை.. நிச்சயம் "முடியவே முடியாது அழுத்தம்" திருத்தமாக சொல்லிய கிருஷ்ணசாமி "

Modi and krishnasamy
Modi and krishnasamy

இருநாட்களாக அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் செய்தி நல்லது இல்லை, இந்தியா மன்னிப்பு கேட்கவேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தினால் அது நிச்சயம் நடக்காது எனவும், இந்தியா மன்னிப்பு கேட்காது எனவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்து இருக்கிறார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி.


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-தொலைக்காட்சி விவாதம் - பா.ஜ.க உறுப்பினர் பேச்சு.!இந்தியா மன்னிப்பு கேட்காது.! இந்திய மக்கள் அதற்கு ஒருபோதும் சம்மதிக்கவும் மாட்டார்கள்.!

இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடந்த விவாதத்தில் பங்கு பெற்ற பாரதிய  ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் நுகர்பா சர்மா மற்றும் ஜிண்டால் ஆகியோர் இஸ்லாமிய இறை தூதுவர் பற்றி ஆட்சேபத்திற்குரிய கருத்து தெரிவித்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர்.

எனினும் அரபு நாடுகளான கத்தார், சவுதி அரேபியா, துபாய், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கண்டனம் எழுப்பப்படுவதுடன் இந்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுவதாகத் தெரிகிறது. 

இந்திய நாடு 140 கோடி மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு. அதில் பல அரசியல் கட்சிகள் உண்டு; அவற்றில் ஒன்றான பாரதிய ஜனதா கட்சி தற்போது ஆட்சியில் உள்ளது. அக்கட்சியின் உறுப்பினர்கள் இருவர் இன்னொரு மதப் பிரிவினர் மனம் வருந்தும்படி கருத்து தெரிவித்தார்கள் என்பதற்காக அவர்கள் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர்.

எனினும் அதில் திருப்தி அடையாமல் சில நாடுகள் இந்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் அழுத்தத்திற்குச் செவி சாய்த்து இந்திய அரசு மன்னிப்பு கேட்டால் 140 கோடி மக்களும் மன்னிப்பு கேட்டதாக அர்த்தம். அது போன்ற ஒரு நடவடிக்கையை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்; இந்திய அரசும் அதற்குச் செவி சாய்க்கக் கூடாது.

இந்தியா என்றால் எப்படி பாஜகவையோ அல்லது வேறு எந்த ஒரு கட்சியையோ அடையாளப்படுத்துவது ஆகாதோ, அதே போன்று தான், பாஜக கட்சி என்றால் அதுவே இந்திய தேசம் என்றும் ஆகிவிடாது. எனவே அரேபிய நாடுகள் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்னும் சிறிதும் பொருத்தமில்லாத கோரிக்கையை  வலியுறுத்தக் கூடாது.

மேலும் கடந்த இரண்டு நாட்களாக வரும் செய்திகள் இந்திய மக்களை பெரும் கவலைக்கு உட்படுத்துகின்றன. வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்திய மக்களை வேலையை விட்டு நீக்கிட  அச்சுறுத்துவதாகவும், இந்தியப் பொருட்கள் அந்நாடுகளில் புறக்கணிக்கப்படுவதாகவும் வரும் செய்திகள் எந்நாட்டவர்க்கும் நல்லதல்ல. 

ஆயிரம் ஆண்டுகள் இந்திய தேசமும், இந்திய மக்களும் ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் முகலாயர்களின் படையெடுப்பால் இழந்தவைகள் ஏராளம். அவற்றைச் சொல்லிமாளாது. அப்படையெடுப்புக்களால் இந்திய வழிபாட்டுத் தலங்களுக்கும், பண்பாட்டிற்கும் மீட்க முடியாத சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றிற்கெல்லாம் யார் இதுவரை மன்னிப்பு கேட்டார்கள். யார் மன்னிப்பு கேட்பார்கள்?

2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துர்கா பூஜை பண்டிகையின் போது பங்களா தேசத்தில் இந்துக்களின்  வழிபாட்டுத் தலங்களும், உடைமைகளும் அழித்தொழிக்கப்பட்டன; 21 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் இந்துக்கள் தினம் தினம் சித்திரவதை செய்யப்படுகின்றனர். இந்தியாவின் அங்கமாக உள்ள காஷ்மீரில் கூட இந்துக்கள் தினமும் கொல்லப்படுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் இந்து வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் வளைகுடா நாடுகளிலிருந்து ஒரு கண்டனம் கூட எழவில்லையே? இந்தியா மற்றும் இந்துக்களிடம் இதுவரை எவரும் மன்னிப்பு கேட்கவில்லையே? 

ஆனால் இப்பொழுது ஒரு தேசிய கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் ஒரு மதம் குறித்து பேசியதற்காக 140 கோடி இந்திய மக்களையும் மன்னிப்பு கேட்கச் சொல்வது உள்நோக்கம் கொண்டது. மேலும் அவை அரேபிய வளைகுடா நாடுகளில் உள்ள இந்துக்களுக்குக் கொடுக்கப்படும் அச்சுறுத்தல்களாகவே இதை கருதப்பட வேண்டியுள்ளது. உலகளவில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் இது போன்ற எந்தவித நடவடிக்கைகளும் பொது அமைதிக்கு உதவாது. மேலும் இந்திய தேசத்தில் வசித்துக் கொண்டே இந்த பிரச்சினையை மையப்படுத்தி இந்தியத் தேசத்திற்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீதும் உள்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, இந்த பிரச்சனையை அரபு நாடுகள் இதற்குமேல் வளர்த்துக் கொண்டு போகாமல் பாஜக எடுத்த நடவடிக்கையில் திருப்தி அடைந்து பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

ஒரு கட்சியின் இரு உறுப்பினர்கள் பிரச்சினையை எவரும் இந்திய தேச பிரச்சினையாக்கக் கூடாது.!இந்தியா ஒருபோதும் மன்னிப்பு கேட்காது,கேட்க வேண்டிய எவ்வித அவசியமும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார் கிருஷ்ணசாமி.