அமிட்ஷா தமிழகம் வருகை தந்த போது விமான நிலையத்தில் இருந்து அமிட்ஷா செல்லும் வழியில் மின் தடை ஏற்பட்டது, அப்போதைய மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அடுத்த சில நாட்களில் பெரும் பின்னடவை சந்தித்து தற்போது சிறையில் இருக்கிறார்.இந்நிலையில் எ வ வேலு இந்தியா குறித்து சர்ச்சையாக பேசியதை குறிப்பிட்டு பிரதமர் மோடி திமுகவினரை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். மேலும் எவ வேலு பேச்சிற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது.
இந்த சூழலில் தான் வேறு வழியில்லாமல் விளக்கம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தார் எ.வ.வேலு விளக்கம் கொடுத்தால் பிரச்சனை முடியும் என கணக்கு போட்டு எ வ வேலு அறிக்கை வெளியிட அதில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகள் தான் தற்போது மீண்டும் சிக்கலில் வேலுவை இழுத்து விட்டு இருக்கிறது.
எவ.வேலு வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்குப் பொறுப்பு வகிக்கும் அரைவேக்காடுகள் போலவே ஒன்றிய அமைச்சர்கள் பேசுவது ஆச்சரியமளித்த நிலையில், நாட்டை ஆளக்கூடிய உயர்ந்த பொறுப்பில் 9 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களும் அதே வழியில் அவதூறான முறையில் நாடாளுமன்றத்தில் பேசியது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது.
எந்த மாநிலத்தில் என்ன நடக்கிறது, யார் எப்படி செயல்படுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளக்கூடிய உளவு அமைப்புகளை ஒன்றிய அரசு கொண்டுள்ள நிலையில், நாட்டின் பிரதமரிடம் எப்படிப்பட்ட தவறான தகவல்கள் கொண்டு செல்லப்படுகின்றன, அதை அவர் உறுதிப்படுத்தாமல் எப்படி பேசுகிறார் என்பதற்கு, இந்தியா என்றால் வடஇந்தியாதான் என்று பேசியதாக அமைச்சர்கள் முதல் பிரதமர் வரை பேசியிருப்பது காட்டியுள்ளது.
அண்மையில் பேராசிரியர் சுப.வீ அவர்களின் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பிலான நிகழ்வில் நான் கலந்து கொண்டு பேசியதைத்தான் பிரதமரும் ஒன்றிய அமைச்சர்களும் திரித்துக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த நிகழ்வில், திராவிட இயக்கத்தின் கொள்கை வலிமையை எடுத்துக்கூறி, அந்த வழியில்தான் திராவிட மாடல் அரசை தமிழ்நாட்டின் முதலமைச்சர் சிறப்பாக நடத்தி வருகிறார் என்பதை எடுத்துக்கூறி உரையாற்றினேன்.முன்பு இருந்த நிலை என்ன, இப்போதுள்ள நிலை என்ன என்பதை விளக்கும்போது, “ஒரு காலத்தில் இந்தியா என்ற வார்த்தையில்கூட நமக்கு பெரிய தாக்கம் இருந்தது கிடையாதே! நான் சொல்வது ஒரு காலத்தில். இந்தியான்னா ஏதோ வடக்கே இருக்கிற ஊரு. நம்ம ஊரு தமிழ்நாடுதான்.
முடிந்தால் இதைத் திராவிடநாடாக்க முடியுமா என்று யோசிப்போம்” என்று முன்பிருந்த பழைய நிலைமையினைச் சுட்டிக்காட்டினேன். திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிடநாடு கோரிக்கையை முன்வைத்ததும், அது குறித்து நாடாளுமன்ற மாநிலங்களைவில் I belong to the Dravidian Stock முழங்கியதும் வரலாறல்லவா.
பின்னர், இந்தியா மீது சீனா போர் தொடுத்த காலத்தில், வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும் என்று அண்ணா அவர்கள் இந்தியாவின் நலன் கருதி எடுத்துரைத்ததும், பிரிவினைத் தடைச் சட்டத்தை எதிர்கொண்டு இயக்கத்தைக் காப்பாற்றும் விதமாக திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டதும், பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டாலும் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதும் வரலாற்று உண்மைகள் அல்லவா!வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்ற அண்ணாவின் முழக்கம் உண்மையாக இருந்தது.
அதனால்தான் மாநில சுயாட்சியைக் கோரினோம். மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அதன் காரணமாக, அன்றைக்கு இருந்த நிலைமை மாறி, திராவிட நாடு என்ற சிந்தனையைக் கைவிட்டு, திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலமாக உயர்ந்து நிற்கிறது.
ஒன்றுபட்ட ஒருமைப்பாடு கொண்ட பன்முகத்தன்மையுடன் மாநில உரிமைகளை மதிக்கும் இந்தியாவை மீட்டெடுக்க வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் காலத்திலும், அதனைத் தொடர்ந்து இன்றைய முதலமைச்சர், கழகத் தலைவர் தலைமையிலும் தொடர்ந்து பாடுபடுகிறோம். இந்தியாவின் ஜனநாயகத்திற்கு நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் துணை நின்று மீட்டெடுத்த இயக்கம் தி.மு.க. என்பதை நாடறியும்.
இதைத்தான் அந்த நிகழ்வில், “ஏதோ தூரத்தில் இருக்கிற ஊர் இந்தியா என்ற நிலைமையை மாற்றி, இன்று இந்தியாவையே காப்பாற்ற வேண்டிய நிலைமை தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழனுக்கு அந்தப் பொறுப்பு இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது. திராவிடர் கழகம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை உள்ளிட்ட அனைவருக்கும் இருக்கிறது” என்று எடுத்துரைத்தேன்.
இந்தியாவைக் காக்க வேண்டிய பொறுப்பு எல்லாருக்கும் இருக்கிறது என்பது எப்படி தவறான கருத்தாக இருக்க முடியும்? ஒரு வேளை அந்தப் பொறுப்பை நிறைவேற்றாத ஒன்றிய பா.ஜ.க அரசு, நாட்டின் மீது அக்கறை கொண்டவர்களும் அதை செய்யக்கூடாது என நினைக்கிறதா?நான் பேசியதை முழுமையாக அறியாத அரைவேக்காடுகள் அதனைக் காதில் வாங்காமல், கவனம் செலுத்தாமல் அரசியல் விளம்பரத்திற்காக எதையோ செய்துவிட்டுப் போகட்டும். பிரதமர் கூடவா முழுமையாக எதையும் தெரிந்துகொள்ளாமல் இத்தனை காலம் ஆட்சி நடத்தியிருக்கிறார் என்பதை நினைக்கும்போது பரிதாபமும் வேதனையும் படுகிறேன்.
நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் மணிப்பூர் என்ற வார்த்தையை உச்சரித்ததைவிட, தி.மு.க, தமிழ்நாடு என்று உச்சரித்ததுதான் அதிகம்.என குறிப்பிட்டு இருக்கிறார் வேலு ஆனால் இங்கு தான் புது சிக்கல் உண்டாகி இருக்கிறது, ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலையை ஆடு என கிண்டல் செய்ததுடன் அவரிடம் வாட்ச் பில் கேட்ட செயல்பாடுதான் தற்போது செந்தில் பாலாஜி சிறை செல்ல காரணமாக அமைந்ததாக கூறப்பட்ட நிலையில், அமைச்சர் வேலு அறைவேக்காடு எனவும் மணிப்பூர் குறித்து பிரதமர் மோடியை விமர்சனம் செய்ததும் விரைவில் செந்தில் பாலாஜி பொன்முடி வரிசையில் எ வ வேலுவும் மிக பெரிய பிரச்சனையில் சிக்குவார் என்று கூறப்படுகிறது.
அமைச்சர் காட்டமாக அறிக்கை வெளியிட்ட நிலையில் இந்த விவகாராத்தில் அடுத்தக்கட்டமாக பல பின் விளைவுகள் இருக்கும் என்று ஆளும் தரப்பு சற்று அடக்கி வாசிக்க வாய் மொழி உத்தரவு போட்டு இருப்பதாக கூறப்படுகிறது.