சட்டத்தில் இந்தியா என்ற பெயர் உள்ள இடத்தில் இனி பாரத் எனும் பெயர் இடம்பெற வேண்டும் என்பது தொடர்பான மசோதாவை, நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார்.இந்திய தண்டனை சட்டம் 1860 ல் வரையப்பட்டு 1862 ல் பிரித்தானிய ஆட்சியின் போது காலனித்துவ இந்தியாவில் அமலுக்கு வந்தது. இது பல முறை திருத்தம் செய்யப்பட்டு, இப்போது மற்ற குற்றவியல் விதிமுறைகளையும் தன்னுள்ளே கொண்டு விரிவடைந்துள்ளது.
இந்திய சாட்சி சட்டம் என்பது 1872ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் ஆகும். இது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை மேலும் 167 பிரிவுகளை உள்ளடக்கியது. இதில் சாட்சியங்கள் பற்றியும், ஆவணங்களின் தன்மைகள் பற்றியும் நீதிமன்றத்தில் ஏற்கதக்க பொருண்மைகள் பற்றியும் உள்ளன.
குற்றவியல் சட்டம் (Criminal law) குற்றங்களைக் குறித்தான சட்ட அமைப்பு ஆகும். இது சமூக நடத்தையை ஒழுங்குபடுத்துவதுடன் மிரட்டல், தீங்கு விளைவிப்பது, மற்றும் உடல்நலம், பாதுகாப்பு, மக்களின் நன்னெறி நலம் ஆகியவற்றிற்கு குந்தகம் விளைவிக்கின்ற பிற செயல்களை தடை செய்கிறது.
இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட இந்த 3 சட்டங்களில் இந்தியா என்ற பெயரை பாரதிய என மாற்றுவது தொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதாக்கள் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் எவிடென்ஸ் சட்டம் ஆகியவற்றின் பெயரை மாற்ற வழிவகை செய்கிறது. இந்திய தண்டனை சட்டத்தின் பெயரை பாரதிய நியாய சன்ஹிதா என மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பெயரை பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் இந்திய ஆதார சட்டத்தின் பெயரை பாரதிய சாக்ஷயா என பெயரை மாற்ற இந்த மசோதாக்கள் பரிந்துரைக்கிறது.
மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 1860 முதல் 2023 வரை நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பு ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டங்களின்படி செயல்பட்டது. ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட 3 சட்டங்களின் பெயர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
3 மசோதாக்களும் நாடாளுமன்ற குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். அந்த மூன்று சட்டங்களும் மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால், நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பில் பெரிய மாற்றம் வரும். புதிய குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது 90%க்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். அதனால் தான், 7 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ள, அனைத்து வழக்குகளிலும் தடயவியல் குழு குற்றம் நடந்த இடத்திற்குச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹீதா மூலம், தேசத்துரோகம் போன்ற சட்டங்களை ரத்து செய்கிறோம் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என அசாம் மாநில முதலமைச்சரான ஹிமந்த பிஸ்வா சர்மா வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. பாஜகவை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். இந்த நிலையில் தான் இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களையே, பாரத் என தொடங்கும் பெயர் கொண்டு மாற்றி அமைக்கும் புதிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார் என கூறப்படுகிறது.