
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு பிறப்பித்தார். அதை செய்லபடுத்தாமல் ஒட்டு அரசியலுக்காக திமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது அரசியல் மற்றும் சட்டவட்டங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் திருப்பரங்குன்றம் வழக்கில் நியாயமாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றக் கோரி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், மக்களவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர். இது நீதித்துறையின் செயல்பாடுகளில் அரசியல் தலையீடு என்ற குற்றச்சாட்டுகளையும், நீதித்துறையின் சுதந்திரம் குறித்த கவலைகளையும் தீவிரமாக எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை தொடக்க நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், ஏற்கனவே மக்களவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். அந்தக் கடிதத்தில், நீதிபதியின் உத்தரவு அவரது நீதித்துறை அதிகார வரம்பிற்குள் வந்தது என்றும், ஒரே ஒரு தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு பதவி நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கையை எடுத்தால் அது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், நீதித்துறையின் மரபுகளுக்கும் முரணானதாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதனிடையே, தற்போது உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் இளம் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி, குடியரசுத் தலைவருக்கு தனித்தனியாக கடிதங்கள் அனுப்பி வருகின்றனர். அந்தக் கடிதங்களில், நீதிபதிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பதவி நீக்க தீர்மானம் முற்றிலும் நியாயமற்றதும், அரசியல் உள்நோக்கம் கொண்டதுமாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நீதிபதி சுவாமிநாதன், தனது பணிக்காலம் முழுவதும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு, லட்சக்கணக்கான வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கியவர் என்றும், மதம், சாதி, அரசியல் பார்வை போன்ற எந்தவொரு வேறுபாடும் இன்றி நீதியை வழங்கி வந்தவர் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதிலும், சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பாரபட்சமற்ற நீதி கிடைக்கச் செய்வதிலும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முக்கிய பங்காற்றி வருகிறார் என்றும், அவரது தீர்ப்புகள் சட்டத்தின் அடிப்படையிலும், அரசியலமைப்புச் சாசனத்தின் இதயத்துடிப்பை பிரதிபலிப்பதாகவும் இளம் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ஒரு வழக்கில் மாநில அரசுக்கு எதிராக அவர் வழங்கிய தீர்ப்பின் காரணமாகவே, பழிவாங்கும் நோக்கில் இந்த பதவி நீக்க தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அரசியல் லாபநஷ்டக் கணக்குகளின் அடிப்படையில் மதிப்பிட்டு, அதற்காக நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய முயற்சிப்பது மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என்றும், இது நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைப்பதோடு, நீதிபதிகள் தங்கள் கடமைகளை சுதந்திரமாகச் செய்ய முடியாத நிலையை உருவாக்கும் என்றும் கடிதங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள், நீதித்துறையில் தேவையற்ற அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்பதால், அரசியலமைப்பையும், நீதித்துறையின் மரியாதையையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவரை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த விவகாரம், சட்டம்–அரசியல் எல்லைகள் எங்கு வரையறுக்கப்பட வேண்டும் என்ற கேள்வியையும், நீதித்துறையின் சுயாதீனத்தை காக்க அரசியலமைப்புச் சட்டம் அளித்த பாதுகாப்புகள் எவ்வளவு முக்கியம் என்பதையும் மீண்டும் ஒரு முறை தேசிய அளவில் முன்வைத்துள்ளது.இது திமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
