அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இடையே நடைபெற்ற வாக்குவாத்தில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கீழே தள்ளி விடப்பட்ட சம்பவத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்த சம்பவம் இராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
ராமநாதபுரத்தின் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.பி நவாஸ்கனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி 3 மணிக்கு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் 2.30 மணிக்கே வந்துவிட்டதால், அவரது உத்தரவின் பெயரில் மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சியை தொடங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் 3 மணிக்கு நவாஸ்கனி எம்.பி நிகழ்ச்சி நடக்கும் பள்ளிக்கு வந்தபோது, நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததை பார்த்து ஆட்சியர் விஷ்ணு சந்திரனிடம், முன்கூட்டியே நிகழ்ச்சி நடக்கிறது என்றால் தகவல் தெரிவிக்க மாட்டீர்களா' அமைச்சர் மட்டும் நிகழ்ச்சிக்கு போதும் என்றால் எனக்கு எதற்கு அழைப்பு விடுத்தீர்கள் என ஆட்சியரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.
அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் குறிக்கிட்டு, அடுத்த முறை இது போன்ற நடக்காமல் பார்த்துக் கொள்வோம் வாருங்கள் என கூறியுள்ளார். நானும் மக்கள் பிரதிநிதி தான் எனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்ற ஆதங்கத்தில்தான் ஆட்சியரிடம் கேட்கிறேன். நீங்கள் குறிக்கிடாதீர்கள். நான் ஆட்சியரிடம் பேசிக்கொள்கிறேன் என கோபமாக பேசியுள்ளார். இதனால் அமைச்சர் ராஜகண்ணப்பனின் ஆதரவாளர்களுக்கும், எம்.பி நவாஸ்கனி ஆதரவாளர்க்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
அசாதாரண சூழ்ல் உருவாகுவதை அறிந்து ஆட்சியர் விஷ்ணு சந்திரன் நவாஸ் கனி எம்.பியை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவரது பேச்சை காது கொடுத்து கேட்காமல் அங்கிருந்தபடியே தலைமைச் செயலாளருக்கு தொடர்பு கொண்டு மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறிவிட்டு நிகழ்ச்சியிலிருந்து எம்.பி நவாஸ்கனி வெளிநடப்பு செய்தார். இதனால் நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வெளிநடப்பு செய்த நவாஸ்கனி எம்.பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில்'நிகழ்ச்சி முன்கூட்டியே தொடங்கப்படும் தகவல் தெரிவித்து இருந்தால் வந்திருப்பேன். இது எங்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது. மாவட்ட நிர்வாகத்தினர் இது போல் நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து பார்த்தால், நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது என மாவட்ட ஆட்சியர் மீது தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளேன். இப்போதுதான் புதிதாக மாவட்ட ஆட்சித் தலைவர் வந்திருக்கிறார் இனிமேல் திருத்திக் கொள்வார். இனி வரக்கூடிய காலங்களில் அதனை சரி செய்து கொள்ள வேண்டும், இது போன்று பண்ணக்கூடாது என்பதற்காக வெளிநடப்பு செய்துள்ளேன். இதில் உள் அரசியல் இருக்கிறதா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. நான் யார் தரப்பும் இல்லை. நான் ஒரு மக்கள் பிரதிநிதி. என்னுடைய உரிமை அதனை மாவட்ட ஆட்சியரிடம் கூறினேன்.
அமைச்சர் ராஜகண்ணப்பனும், தி.மு.க கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.பி நவாஸ் கனியும் அரசு நிகழ்ச்சியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவிய நிலையில் மாவட்ட ஆட்சிருக்கே அரசு நிகழ்ச்சியில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை உண்டாகி இருக்கிறது என பலரும் விமர்சனம் செய்தனர்.
மேலும் ஆட்சியரை தள்ளிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியிறுத்திய நிலையில் தற்போது நவாஸ் கனி ஆதரவாளர் மற்றும் உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 நபர்களை காவல்துறை கைது செய்ய நடவடிக்கை எடுத்து இருக்கிறது.