24 special

இந்தியாவை விட்டா வேறு வழியில்லை... அழுது புலம்பும் அமெரிக்க நிறுவனங்கள்! டிரம்ப் தலையில் இடியை இறக்கிய MNC கம்பெனிகள்

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் ஹெச்-1பி விசா கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியுள்ளார். இதனால் அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் இந்திய இளைஞர்களுக்கும், வெளிநாட்டு திறமைகளை நம்பியுள்ள அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கும் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒருபக்கம் விசா விதிகளை கடுமையாக்கி வேலை வாய்ப்புகளை குறைக்கும் முயற்சி நடந்தாலும், மறுபக்கம் இதுவே இந்தியாவுக்கு ஒரு புதிய வாய்ப்பின் கதவைத் திறந்துவிட்டது.


உலகம் முழுவதும் இருக்கும் 3,200 சர்வதேச திறன் மையங்கள் (GCC)-களில் 1,700 மையங்கள் இந்தியாவில் தான் உள்ளது. இதுவே உலகளாவிய மொத்தத்தின் பாதிக்கும் அதிகம் ஆகும்.இன்று இந்தியாவில் உள்ள சர்வதேச திறன் மையங்கள் வெறும் அவுட்சோர்சிங் அலுவலகங்களாக இல்லாமல், ஏ.ஐ., சைபர் பாதுகாப்பு, ஆராய்ச்சி, புதுமை, தயாரிப்பு மேம்பாடு என உலகின் முன்னணி தொழில்நுட்பப் பணிகளைச் செய்து வருகின்றன. அதாவது, இந்தியாவின் மூளைத் திறன் இன்று உலக தொழில்நுட்ப வளர்ச்சியின் முதுகெலும்பாக உள்ளது.இதற்கிடையே அதிகரித்து வரும் ஏஐ பயன்பாடு, விசா கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வியூகங்களை மாற்றி அமைத்து வருகின்றன..இதனால் சர்வதேச திறன்களுடன் இருக்கும் இந்தியாவில் உள்ள சர்வதேச திறன் மையங்கள், உலக அளவில் உறுதியான மையங்களாக உருவெடுத்துள்ளன.

இதற்கிடையில் டெலாய்ட் இந்தியாவின் பார்ட்னரும் சர்வதேச திறன் மையங்க GCC தொழில்துறைத் தலைவருமான ரோஹன் லோபோ,  "GCC-கள் இந்தச் சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமானவை. அவை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சரியாக இருக்கிறது. இப்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் பணியாளர் தேவைகளை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்துவிட்டன. இதனால் வரும் காலங்களில் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்" என்றார்.

இந்த மாதம் தொடக்கத்தில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப், புதிய ஹெச்-1பி விசா விண்ணப்பக் கட்டணத்தை $2,000-$5,000 என்பதில் இருந்து $100,000 ஆக உயர்த்தினார். இதனால் திறமையான வெளிநாட்டு ஊழியர்களை நம்பி செயல்படும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. கட்டணத்தை உயர்த்தியது மட்டுமின்றி ஹெச்-1பி மற்றும் எல்-1 பணி விசா விதிகளைக் கடுமையாக்கும் மசோதாவும் கொண்டு வரப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகள் வெளிநாட்டினர் அதிகளவில் வேலைக்கு வைத்திருக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும்.

டிரம்பின் விசா கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகும். அதுபோன்ற சூழல்களில் AI, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் வேலைகள் இந்திய GCC-களுக்கு கைமாறலாம் எனத் தொழில் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பொதுவாக இதுபோன்ற வேலைகளை அமெரிக்காவில் இருந்து தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. உலகின் எந்தவொரு பகுதியில் இருந்து வேண்டுமானாலும் வேலையைச் செய்யலாம். கொரோனா காலத்தில் முக்கிய தொழில்நுட்பப் பணிகளை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது நிரூபணம் ஆனதாக சிடிஎஸ் இந்தியாவின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ராம்குமார் ராமமூர்த்தி கூறினார். இதனால் நிறுவனங்களை இந்திய GCCகளுக்கு மாற்றுவதே சரியாக இருக்கும்.

ஏனென்றால் அமேசான், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் ஆல்பாபெட் (கூகிளின் தாய் நிறுவனம்) போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், வால் ஸ்ட்ரீட் வங்கியான ஜேபிமோர்கன் சேஸ் மற்றும் வால்மார்ட் ஆகியவை தான் ஹெச்-1பி விசாக்களை அதிகம் ஸ்பான்சர் செய்கின்றன, இந்த நிறுவனங்களால் எளிதாக இந்தியாவுக்குத் தங்கள் வேலைகளை இந்தியாவுக்கு மாற்ற முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.இதனால் அமெரிக்க டெக் நிறுவனங்கள்  இது குறித்து ஆலோசனைகளை தொடங்கிவிட்டது. டிரம்ப் வரி தொடர்ந்தால் வேலைகள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குக் கைமாறவே வாய்ப்புகள் அதிகம் எனச் சொல்லப்படுகிறது.