புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தஞ்சை களிமேடு தேர் திருவிழா விபத்து குறித்து பல்வேறு முக்கிய சம்பவங்களை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார் அது பின்வருமாறு :
தஞ்சை களிமேடு தேரோட்டச் சம்பவம் - புதிய தமிழகம் கட்சி இரங்கல்!ஏன்? எதனால்? எப்படி நடந்தது என்பது குறித்து ஆய்வை விரைந்து முடிக்கவும்; உண்மைக் காரணங்கள் கண்டறியப்படவும் வேண்டும்,தஞ்சை மாவட்டம் களிமேடு என்ற பகுதியில் நேற்று இரவு நடந்த தேரோட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது.
அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அச்சம்பவத்தில் காயம்பட்ட அனைவருக்கும் உயர் தர நவீன சிகிச்சையளித்து குணமடைய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
இச்சம்பவம் ஏன்? எதனால்? எப்படி நடந்தது என்பது குறித்து ஆய்வை விரைந்து முடிக்கவும்; உண்மைக் காரணங்கள் கண்டறியப்படவும் வேண்டும்.ஐந்து வருடங்களுக்கு முன்பு சாத்தூரில் இதே போன்று நிகழ்வு ஏற்பட்டு ஐந்து பேர் உயிரிழந்தார்கள். அண்மையில் மதுரையில் இதே போன்ற தேரோட்ட நிகழ்வில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டது;
மதுரை சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தார்கள். அதேபோல, ஜல்லிக்கட்டு விழாக்களிலும் பல இடங்களில் காயங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளில் பெரும்பாலான கோவில் நிகழ்ச்சிகளில் தேரோட்ட நிகழ்ச்சி என்பது அங்கமாகவே உள்ளது. எனவே, எதிர்காலங்களில் திருவிழாக்கள், தேரோட்டம், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட இது போன்ற மக்கள் அதிகமாகக்கூடும் சமூக விழாக்களில் எவ்விதமான பாதிப்புகளும் பொதுமக்களுக்கு ஏற்படாத வகையில் அவைகளைக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில்,
இதை ஒரு பாடமாகக் கொண்டு பொதுவான விதிகளை அமைத்து, அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.