
அமெரிக்க அதிபர் பதவியேற்றத்திலிருந்து டொனால்ட் டிரம்ப் ஒவ்வொரு நாடுகளுக்கும் வரிகளை விதித்து வருகிறது. அந்த வகையில் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி நேற்று முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிரம்ப் திடீரென்று தள்ளிவைத்துள்ளார். இதன் பின்னணியில் ரஷ்யா உடனான நம் நாட்டின் உறவு தான் காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அதையும் தாண்டி முக்கியமான விஷயம் உள்ளது. அமெரிக்கா எவ்வளவு கெஞ்சியும் நம் நாடு அந்த டீலுக்கு மறுத்ததால் தான் டென்ஷனான டிரம்ப் 25 சதவீத வரியை அறிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதமே இந்த வரியை விதித்தார். அதன்பிறகு வர்த்தக பேச்சு வார்த்தைக்காக 90 நாட்கள் ஒத்திவைத்தார். இந்த காலக்கட்டத்தில் அமெரிக்காவுடன் நம் நாடு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் வரும் 7 ம் தேதி முதல் 25 சதவீத வரியை நடைமுறைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார்.
ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த தடையை மீறி ரஷ்யாவிடம் ஆயுதம், எண்ணெய், கியாஸ் உள்ளிட்டவற்றை தொடர்ந்து நம் நாடு வாங்கி வருகிறது. பல நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து பொருட்களை வாங்காத நிலையில் நம் நாட்டுக்கு சலுகை விலையிலேயே கிடைக்கிறது. இதனால் அதிகளவிலான கச்சா எண்ணெயை நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து வாங்கி வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா சார்பில் நம் நாட்டுக்கு விதிக்கப்பட்ட வரியின் பின்னணியில் ரஷ்யாவின் நட்பு தான் காரணம் என்பது ஒரு காரணம்
ஆனால் இன்னொரு காரணமும் உள்ளதாம். .இதுபற்றி விசாரித்தபோது பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், மக்காச்சோளம், சோயா பீன்ஸ், ஆப்பிள், பாதாம் மற்றம் பால் பொருட்கள் சார்ந்த வர்த்தகத்தை அதிகளவில் இந்தியாவில் துவங்க அமெரிக்கா விரும்புகிறது.
140 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவை மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா பார்க்கிறது. இதனால் தங்கள் வேளாண் மற்றும் பால் பொருட்களை வரி இன்றி மலிவு விலையில் இந்திய சந்தைக்குள் கொண்டு வர நினைக்கிறது. இந்த பொருட்கள் மீது இந்தியா வரி போட்டுள்ளது. அதை தளர்த்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது . ஒருவேளை அமெரிக்காவின் வேளாண், பால் பொருட்களுக்கு வரியை தளர்த்தினால், அவர்கள் மிகப்பெரிய அளவில் பொருட்களை இந்தியாவில் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். இதன்மூலம் அமெரிக்காவின் வியாபாரம் பல மடங்கு உயரும்.
அதே நேரம், உள்ளூர் சிறு குறு விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மிகப்பெரிய பாதிப்பை சந்திப்பார்கள். உள்ளூர் வர்த்தகம் பெரிய அளவில் அடிவாங்கும்.குறிப்பாக 8 கோடி பால் விவசாயிகளும், 70 கோடி கிராமப்புற விவசாய குடும்பத்தினரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் அமெரிக்காவின் இந்த டீலுக்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கோபமான அமெரிக்கா நம் நாட்டுக்கு 25 சதவீத வரியை போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.