
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அசாரின் மூத்த சகோதரர் முகமது தாஹிர் அன்வர், மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீவிரவாதக் குழுவின் அதிகாரப்பூர்வத் தகவல் தொடர்புகள் வாயிலாக, அன்வரின் இறுதிச் சடங்குகள் பாகிஸ்தானின் பஹாவல்பூரில் உள்ள ஜாமியா மஸ்ஜித் உஸ்மான் வாலியில் திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஒரு முக்கியத் தலைவராகக் கருதப்பட்ட அன்வர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்த எந்தத் தகவலையும் அந்த அமைப்பு வெளிப்படையாகத் தெரிவிக்காமல் ரகசியம் காத்து வருகிறது. மசூத் அசாரின் ஐந்து சகோதரர்களில் ஒருவரான முகமது தாஹிர் அன்வர், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கொள்கை முடிவுகளிலும் அதன் கள நடவடிக்கைகளிலும் மிக முக்கியப் பங்காற்றி வந்தான். குறிப்பாக, இந்தியாவுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட 2001 நாடாளுமன்றத் தாக்குதல், 2016 யூரி தாக்குதல் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய 2019 புல்வாமா தாக்குதல் போன்ற பாரிய பயங்கரவாதச் செயல்களுக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்ட முக்கிய மூளைகளில் இவனும் ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில காலங்களாகவே ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமைக்கு இந்தியா தரப்பிலிருந்து கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களின் விளைவாகத் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நெருங்கிய உதவியாளர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக மசூத் அசார் கடந்த ஆண்டே புலம்பித் தீர்த்திருந்தான். 1994-ல் இந்தியாவில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஐசி 814 விமானக் கடத்தல் சம்பவத்தின் போது பயணிகளின் உயிருக்குப் பதிலாக விடுவிக்கப்பட்ட மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் பலர், பஹாவல்பூர் தலைமையகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஏற்கனவே பலியாகியுள்ளனர். இதில் அவனது மூத்த சகோதரி, மருமகன்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எனப் பலரும் அடக்கம்.
தற்போது முகமது தாஹிர் அன்வரின் மர்ம மரணம், பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் இந்திய எதிர்ப்பு பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்குத் துணை நிற்கும் அதிகார வர்க்கத்தினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தான், இந்தியா எங்களின் முதன்மை எதிரி என்று பகிரங்கமாகப் பேசிய பாகிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதி காமர் ஜாவித் பாஜ்வா, குளியலறையில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்தியாவுக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டும் பயங்கரவாதிகள் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரிகள் வரிசையாக அடையாளம் தெரியாத நபர்களால் வேட்டையாடப்படுவதோ அல்லது மர்மமான விபத்துக்கள் மற்றும் நோய்கள் மூலம் உயிரிழப்பதோ ஒரு தொடர்கதையாகி வருகிறது.
