இந்தியா : கடந்த சிலநாட்களுக்கு முன்னர் ஆபிகானிஸ்தான் தலைநகரம் காபூலில் அமைந்துள்ள சீக்கியர்களின் புனிதஸ்தலமான குருத்வாராவில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஐநாவில் நடைபெற்ற கூட்டத்திலும் தனது வலுவான கண்டனங்களை பதிவுசெய்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று காபூலில் உள்ள பாக் இ பாலா பகுதியில் அமைந்துள்ள சீக்கியர்களின் புனிதஸ்தலமான குருத்வாராவில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த வெடிகுண்டு தாக்குதல்களில் ஒரு சீக்கியர் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலை நாங்கள்தான் நடத்தினோம் என பகிரங்கமாக இஸ்லாமிக் ஸ்டேட் எனும் அமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து திங்கட்கிழமை ஐநாசபையில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி டிஎஸ் திருமூர்த்தி உரையாற்றினார். அவர் பேசுகையில் "பௌத்தம் ஹிந்து மதம் மற்றும் சீக்கியம் உள்ளிட்ட சிறுபான்மை மதங்களுக்கு எதிராக வெறுப்புக்கள் மற்றும் பாகுபாடுகள் அதிகரித்து வருவதை ஒருபோதும் புறந்தள்ள முடியாது.
இந்தமதங்களுக்கு எதிராக நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. ஆப்ரஹாமியம் இல்லாத இந்த சிறுபான்மை மதங்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் தாக்குதல்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. குருத்வாரா கார்டே பர்வான் தாக்கப்பட்டு முற்றிலும் சேதப்படுத்தப்பட்டு மதநம்பிக்கை இழிவுபடுத்தப்பட்டு இரு உயிர்களை பலிவாங்கிய இந்த கோழைத்தனமான கொடூரமான தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது.
ஐநா உறுப்புநாடுகள் அனைத்தும் ஆப்ரஹாமியமில்லாத மாதங்களுக்கு எதிராக பெருகிவரும் வெறுப்புகளை கண்டித்து மதவெறியை எதிர்த்து ஒன்றிணைந்து போராடவேண்டிய நேரம் இது. நீங்கள் உண்மையாகவே மதவெறியை எதிர்த்து போராட விரும்பினால் மதவெறிமீது இரட்டை நிலை இருக்கமுடியாது" என கூறிய திருமூர்த்தி ஹிந்துமத நம்பிக்கைகள் மீது பரப்பப்படும் வெறுப்பு பிரச்சாரம் குறித்தும் தனது கவலையை வெளிப்படுத்தினார்.