24 special

வானதி சீனிவாசனுக்கு வாக்கு கொடுத்த மத்திய அமைச்சர்! கோவைக்கு அடித்தது அதிர்ஷ்டம்..!

Vanathi srinivasan,  ashwini vaishnaw
Vanathi srinivasan, ashwini vaishnaw

கொரோனாவுக்கு முன்பு இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் மத்திய ரயில்வே அமைச்சரிடம் வானதி சீனிவாசன் நேரில் கோரிக்கை மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் அளித்த கடிதம்:


கோவை பகுதி மக்களின் ரயில்வே துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். ரயில் நிலையங்கள் மறுசீரமைப்புத் திட்டத்தின்கீழ் கோவை ரயில் நிலையத்தை, உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்ற வேண்டும். போதுமான வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன் வட கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.



தமிழகம் மற்றும் கேரள மாநில மக்கள் பயன்பெறும் வகையில் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை, கோவை வரை நீட்டிக்க வேண்டும். கோவையிலிருந்து திருச்செந்தூருக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும்.

பாம்பன் ரயில்ப பாதை சீரமைப்புக்காக நிறுத்தப்பட்ட, மேட்டுப்பாளையத்திலிருந்து, கோவை வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். அதுபோல கோவை பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, கோவையிலிருந்து, பெங்களூருவுக்கு இரவு நேர ரயில்களை இயக்க வேண்டும்.

கொரோனாவுக்கு முன்பு வரை, காலை 5.40 மணிக்கு  கோவையில் இருந்து புறப்பட்டு, காலை 6.45 மணிக்கு பொள்ளாச்சி வந்தடையும், கோவை - பொள்ளாச்சி ரயில் இயக்கப்பட்டது. 

அதுபோல, பொள்ளாச்சியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.45 மணிக்கு கோவைக்கு வந்து சேரும், 'பொள்ளாச்சி - கோவை ரயில்' கொரோனாவுக்கு முன்பு இயக்கப்பட்டது. இதனை மீண்டும் இயக்க வேண்டும் என்பது கோவை, பொள்ளாச்சி பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

அதுபோல, பாலக்காட்டில் இருந்து கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக திருச்செந்தூர் வரை இயக்கப்பட்ட, 'பாலக்காடு - திருச்செந்தூர் -  பாலக்காடு' தினசரி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சர் வாக்குறுதி ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்தபோது, இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, வானதி சீனிவாசனிடம் உறுதி அளித்தார். மத்திய அரசின் ரூ. 300 கோடி நிதியுதி திட்டத்தின்கீழ், கோவை ரயில் நிலையத்தை உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்றப்படும் என்றும் வானதி சீனிவாசனிடம், அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.