24 special

கேரளா நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு இனியாவது உணருங்கள் நாராயணன் திருப்பதி பதிலடி

Mk stalin, narayana thirupayhi
Mk stalin, narayana thirupayhi

கேரள அரசு நியமித்த மீன்வள பல்கலை துணை வேந்தர் நியமனம் செல்லாது என்றும் , புதிய துணை வேந்தரை ஆளுநரே நியமிக்க வேண்டும் என்றும் அம்மாநில உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்கலை மானிய விதி முறைகளை மீறி இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது கேரள கம்யூனிஸ்ட் அரசின் முறைகேடான ஆட்சியின் அவலத்தை உணர்த்துகிறது. தங்கள் கட்சியின் அனுதாபிகளையம், தகுதி இல்லாதவர்களையும் துணை வேந்தர்களாக்கி அடுத்த தலைமுறையை சீர்குலைக்க திட்டமிட்ட கம்யூனிஸ்டுகளின் சதியை முறியடித்துள்ளது இந்த தீர்ப்பு.


அதே போல் தமிழகத்திலும் பல பல்கலைக்கழகங்கள் குறித்த பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக  கல்வியை வியாபாரமாக்கி கல்விக்கூடங்களை கொள்ளையர்களின் கூடாரங்களாக்கியதே திராவிட மாடலின் சாதனை, தமிழக மக்களின் சோதனை. 

பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி, அண்ணா பல்கலைக்கழக  முன்னாள் துணை வேந்தர் ராஜாராம் மற்றும் கோவை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக  முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடி உட்பட பல துணைவேந்தர்கள் லஞ்ச , ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறையிலோ அல்லது பிணையிலோ உள்ளதை முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் மறுக்க முடியுமா?

துணைவேந்தர் பதவிக்கு பல கோடிகள்,  துணை பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் நியமனங்களில் பல லட்சக்கணக்கில் லஞ்சம், மாணவர்களின் அனுமதிகளில், தேர்வில், தேர்ச்சியில் முறைகேடுகள், குண்டூசியில் துவங்கி அனைத்து பொருட்கள் கொள்முதல்களிலும் நிர்வாக ஊழல்கள், மோசடிகள் என அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஊழல் நடைபெற்று வந்த நிலையில், தகுதியற்ற, திறமையற்ற, ஊழல் துணைவேந்தர்களின் மோசமான மற்றும் முறைகேடான நிர்வாகம் தான் இவை அனைத்திற்கும் காரணம் என்பதை கண்டறிந்து கடந்த சில வருடங்களாக திறமையான, தகுதியான துணைவேந்தர்களை பல்கலைக்கழகங்களுக்கு நியமனம் செய்யும் தமிழக ஆளுநரின் நல்ல முயற்சிக்கு எதிராக  ஊழல்வாதிகளை, கல்வி வியாபாரிகளை  நியமித்து தரமற்ற கல்வியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல தமிழக அரசு முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஊழல் எனும் சாக்கடையில் ஊறித் திளைத்துக்கொண்டிருந்த பல்கலைக்கழகங்கள், வேந்தரான தமிழக ஆளுநரின் வழிகாட்டுதலில் மாற்றம் ஏற்பட்டு எழுச்சி பெற்று வருகிறது. ஆனால், இந்த விவகாரத்திலும் மாநில உரிமை,மொழி பற்று என்னும் குறுகிய மலிவான அரசியலை புகுத்தி ஊழலை தொடர்வதற்கான செயல்பாடுகளை தமிழக அரசும், திராவிட முன்னேற்ற கழகமும் முன்னெடுப்பது அடுத்த தலைமுறைக்கு, தமிழ் சமுதாயத்திற்கு  இழைக்கும் மிக பெரும் துரோகம். 

ஆகவே, தமிழக மாணவர்களின் நலன் கருதி, கேரள உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களின்  துணைவேந்தர் நியமனங்களில் தமிழக அரசு தவறு செய்வதை  உணர்ந்து, ஆளுநருக்கே அதிகாரம் என்பதை உணர்ந்து, மசோதாக்களை திரும்ப பெறுவதோடு. ஆளுநருடனான மோதலை தவிர்த்து தமிழகத்தின் அடுத்த தலைமுறைக்கு நல்ல தரமான கல்வியை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும். நாராயணன் திருப்பதி.