24 special

வாயை கொடுத்து வம்பில் சிக்கிய வைகோ..வச்சு செய்த "பேராசிரியர்".!

Vaiko and rama srinivasan
Vaiko and rama srinivasan

மதிமுக பொது செயலாளர் வைகோ தமிழக ஆளுநர் ஆர்என் ரவியின் சமீபத்திய இந்திய ஒருமைப்பாடு குறித்த கருத்திற்கு கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டு இருந்தார், அத்துடன் ஆளுநரிடம் இருந்து பல்கலைக்கழங்களின் "வேந்தர்" பொறுப்பை பறிக்க தமிழக அரசு ஆவணம் செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார் வைகோ.


வைகோ இப்படி பேச தற்போது பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் வகையாக பதிலடியை கொடுத்துள்ளார் வைகோவின் அறிக்கைக்கு பேராசிரியர் கொடுத்த பதிலடி பின்வருமாறு :-

மேதகு தமிழக ஆளுநர் ரவி அவர்கள் துணைவேந்தர்கள் மாநாட்டில், நமது நாட்டின் தேசியம் பற்றி விரிவாகப் பேசியிருப்பது ஒவ்வொரு தமிழனும் இருமாப்புடன் பெருமைப்படும் வகையில் ஆளுநர் அவர்கள் பேசியிருக்கிறார், தேசம் என்பது ஒன்றியங்களின் ஒப்பந்தம் இல்லை, உடல் உறுப்புகள் போல் அமைந்துள்ளது என்றெல்லாம் விரிவாகப் பேசியிருக்கிறார்.

தமிழக ஆளுநர் அவர்களின் உரையை குறிப்பிட்டு பேசிய தமிழக அரசியலில் மூத்த தலைவர் திரு வைகோ அவர்கள், கவர்னர் எதோ தவறு செய்து விட்டது போன்றும், அவர் வரம்புமீறி பேசி விட்டது போன்றும், அதனால் அவர் பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். இதில் வைகோ அவர்களின் பேச்சு தான் வரம்பு மீறியுள்ளது.

மேலும் அவரின் பேச்சு இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. 1947 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியா என்கின்ற நாடு எப்போது இருந்துள்ளது என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். 400 ஆண்டுகளுக்கு முன்பாக 1600வது வருடத்தில் லண்டன் மாநகரில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஒரு கம்பெனி பதிவு செய்யப்பட்டபோது, பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வரவில்லை. அப்போது கூட அந்த கம்பெனியின் பெயர் கிழக்கிந்தியக் கம்பெனி என்றுதான் பதிவு செய்தார்கள் என்றால் பிரிட்டிஷார் வருகைக்கு முன்பு இந்தியா என்கின்ற பெயர் இருந்திருக்கிறது.

1921இல் மரணமடைந்த சுப்பிரமணிய பாரதியார் அவர் நடத்திய பத்திரிக்கைக்கு இந்தியா என்றுதான் பெயர் வைத்திருந்தார். சுவாமி விவேகானந்தர் சிகாகோ மற்றும் ஐரோப்பியாவில் பேசும் போது தான் ஒரு இந்தியர் என்கின்ற வார்த்தையை தான் உலகெங்கும் பேசி இருக்கின்றார். ஆகையால் இது போன்று கேள்வி கேட்கின்ற இடத்தில் வைகோ இருக்கின்றார் என்பதே ஒரு தேசத் துரோக செயல்.

அரசியல் சாசன சட்டத்தின் கீழ் பதவி ஏற்றுக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் வைகோ அவர்கள், இந்திய தேசம் என்பதை ஏற்க மறுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இது போன்ற பழைய கால திராவிட அரசியல் இங்கே எடுபடாது. திராவிட மாடல் அரசியல் என்று அடிக்கடி முதல்வர் அவர்கள் பேசுவது வைகோ பேசிய இந்த பேச்சு தானா என்பதை தமிழக முதல்வரும் தெளிவுபடுத்த வேண்டும்.இத்தனை ஆண்டுகள் கழித்து இந்திய ஒருமைப்பாடு குறித்தும், தேசிய இறையான்மை குறித்தும் இவர்கள் அடிப்படைக் கேள்விகளை திரும்பத்திரும்ப எழுப்புவார்கள் என்று சொன்னால் அவர்களின் தேச உணர்வை சந்தேகிக்கின்ற அவசியம் வருகின்றது.

தற்போது காங்கிரஸ் ஆட்சி இல்லை, மோடி ஆட்சி என்பதை வைகோ அவர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். இந்த தேசத்தின் ஒற்றுமையும், இந்த தேசத்தின் இறையாண்மையையும் தேசியம் என்கின்ற கருத்தில் பாரதிய ஜனதா கட்சி எப்போதும் சமரசம் செய்துகொள்ளாது.

கவர்னர் தேசத்தின் ஒற்றுமை குறித்து பேசியதற்கு வைகோவுக்கு ஏன் இப்படி துடிக்கிறார் என தெரியவில்லை. இந்த போக்கை வைகோ மாற்றிக் கொள்ளவேண்டும்.

மேதகு ஆளுநர் அவர்கள் பேசிய அற்புதமான ஒரு உரையை தேசப்பற்றுள்ள ஒவ்வொரு தமிழனும் ஏற்றுக்கொண்டு போற்றுவான். ஒட்டுமொத்த தமிழகமும் மேதகு ஆளுநர் பின்னால் அணி திரண்டு நிற்கும் என்று இந்த நேரத்தில் சொல்லிக்கொள்கிறேன்.

வைகோ அவர்கள் அவருடைய பேச்சை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கையாக வைக்கிறோம். அரசியல் சாசனம் பற்றி அடிக்கடி பேசும் வைகோ ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய அரசியல் சாசனம் 51A பிரிவின் கீழ், இந்திய குடிமகனுக்கான அடிப்படை கடமைகள் வலியுறுத்தப்படுகின்றன.

அந்த கடமைகளில் வலியுறுத்தப்படும் முக்கியமான கடமை இந்தியா ஒரு தேசம் என்பதை போற்ற வேண்டும், தேசிய சிந்தனையை மதிக்க வேண்டும், தேசத்தின் விடுதலைக்காகப் போரிட்ட அனைவரையும் மதிக்க வேண்டும். இவையெல்லாம் அடிப்படை கடமைகள் என்று அரசியல் சாசனம் வலியுறுத்துகின்றது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என வைகோ பேசிய பேச்சுக்கு பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.