24 special

கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கை தமிழக அரசு என்ன செய்ய போகிறது?

Stalin,  krishnasamy
Stalin, krishnasamy

தேசிய கொடி ஏற்ற மறுத்த தலைமை ஆசிரியை மீது நான்கு நாட்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கை மக்கள் மத்தியில் புயலை கிளப்பியுள்ளது, இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு


தேசியக்கொடி ஏற்ற மறுப்பு.! தருமபுரி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வியின் செயல் தவறானது மட்டுமல்ல, தண்டிக்கத்தக்கதுமாகும்.! பள்ளிக் கல்வித் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

75 வது ஆண்டு சுதந்திர நிறைவு தின கொண்டாட்டத்தை இந்தியாவெங்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, அவரவர் வீடுகளிலும் கொடியேற்றி இந்திய மக்கள் மகிழ்ந்தார்கள். தினமும் தேசியக் கொடி ஏற்றி ‘தேசிய கீதம்’ பாடுவது பள்ளிகளில் இருக்கக்கூடிய முக்கியமான வழக்கம். பல சூழ்நிலைகளில் தினமும் கொடியேற்றுவது இல்லாவிட்டாலும், வாரத்திற்கு ஒருமுறையாவது கொடியேற்று விழா நடைபெறும். ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்; ஜனவரி 26 - குடியரசு தினத்தன்று பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளும், பொதுமக்களும் கலந்து கொள்வர்.

இந்தியாவெங்கும் இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அனைவராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், தருமபுரி மாவட்டம், பேடர அள்ளி அரசுப் பள்ளியில் தமிழ்ச்செல்வி என்ற தலைமை ஆசிரியர் தனது மத நம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டி தேசியக் கொடியேற்ற மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அகண்ட பாரத தேசம் மத ரீதியான பிரிவினைக்குப் பிறகு, 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர பிரகடனம் செய்யப்பட்டபோது, இந்திய நாடு ஜனநாயக, மதச்சார்பற்ற, குடியரசு நாடாக இருக்கும் எனவும்; அதே சமயம் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவரவர் அக அளவில் மத நம்பிக்கைகள் இருக்கலாமே தவிர, அந்நம்பிக்கைகளை பொதுவெளியில் வெளிப்படுத்தக் கூடாது. அவர்கள் இம்மண் மீதான தேசப்பற்றாளர்களாக (patriotic) இருந்திடல் வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்திய தேசத்தின் மூவர்ண தேசியக்கொடி எந்தவொரு குறிப்பிட்ட மத, மொழி, இனப் பிரிவினரைக் குறிக்கக் கூடியது அல்ல. 140 கோடி இந்திய மக்களையும், பரந்துப்பட்ட பாரத தேசத்தையும்; இந்த தேசத்தை மீட்டெடுக்க தங்களை அர்ப்பணித்த முன்னோர்களின் தியாகங்களையும், வெற்றியையும் குறிப்பிடக்கூடிய வகையில் மேலே காவி நிறமும்; அமைதியும், உண்மையும் நிலவ வேண்டும் அடிப்படையில் மத்தியில் வெண்மை நிறமும்;

பாரத தேச மக்களின் வாழ்வு என்றென்றும் செழித்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில் கீழே பச்சை நிறமும்; தர்மம், நியாயம் தழைத்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில் நீல நிறத்தில் 24 ஆரங்கள் கொண்ட அசோக சக்கரத்துடன் ஒட்டுமொத்த இந்திய மக்களின் அடையாளமாக ’தேசியக்கொடி’ விளங்குகிறது.

இந்தியாவினுடைய அரசியல் சாசனம் எந்த ஒரு இந்தியக் குடிமகனின் மத நம்பிக்கையிலும் தலையிடுவதில்லை. ஆனால், ஒவ்வொரு குடிமகனும் இந்தியனாக இருக்க வேண்டும்; இந்திய தேசத்தின் மீது விசுவாசமாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை. ஒருவர் மத நம்பிக்கையோ, மொழிப் பற்றோ, இனப்பற்றோ கூட இல்லாமல் இருந்திடலாம். ஆனால், நாட்டுப்பற்று இல்லாதவர்களாகவோ அல்லது நாட்டை அடையாளப்படுத்தாதவர்களாகவோ இருக்க இயலாது. அவ்வாறு அவர்கள் இருக்க முற்படுவார்களேயானால் அவர்கள் நாதியற்றவர்களாக, அனாதைகளாகவே கருதப்படக்கூடும்.

இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில், உருவாக்கப்பட்ட கல்வித்துறையில் பள்ளியில் ஒரு முக்கியமான பொறுப்பை ஏற்றுக் கொண்டு, அரசால் வழங்கப்படக்கூடிய ஊதியத்தைப் பெற்று வரும் அவர் இந்திய தேசத்தின் விடுதலை நாளான சுதந்திர தினத்தன்று ’நான் இந்திய தேசத்தின் அடையாளமான தேசியக் கொடியை ஏற்றமாட்டேன்; அதற்கு வணக்கம் செலுத்த மாட்டேன்’’ என்று கூறியிருப்பது இந்திய தேசியக் கொடியை அவமதிப்பது மட்டுமல்ல. 140 கோடி இந்திய மக்களையும் அவமதிப்பதற்கு சமமாகும்.

மேலும், அந்த தலைமை ஆசிரியர் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக அப்பள்ளியில் தேசியக்கொடி ஏற்றுவதைத் தவிர்த்து வந்ததாகவும் தெரிய வருகிறது.

பாரத தேசம் ஆயிரக்கணக்கான மொழி பேசக் கூடியவர்களையும்; பல்வேறு இனங்கள், மொழி, சாதிகளையும் உள்ளடக்கியது. மொழி, இனம், சாதி, மதத்தை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு ஆசிரியரும், மாணவர்களும், அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இதே போன்ற கருத்துக்களை வெளியிடுவார்களேயானால் நமது தேச ஒற்றுமையும், இறையாண்மையும் என்னாவது?

மேற்குறிப்பிட்ட தலைமை ஆசிரியர் தான் ‘யகோபாவின் சாட்சி என்ற ஒரு மதப் பிரிவைச் சார்ந்தவர் என்றும்; அவர் கடவுளை மட்டுமே வணங்குவேன்; அதற்கு மட்டுமே வணக்கமும் செலுத்துவேன்; இந்திய தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்த மாட்டேன்’ என்று சொல்வது அபத்தத்திலும் அபத்தம். அந்த தலைமை ஆசிரியர் நிதானத்துடன் தான் பேசினார் தான் பேசினாரா? அல்லது நிதானத்தை இழந்து நடந்து கொண்டாரா? என்பது தெரியவில்லை.

அவரைப் போன்றே அந்தப் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகள் பல்வேறு விதமான மத நம்பிக்கைகளைக் கொண்டிருப்பார்கள். அவர்களும் அவரவருடைய மத நம்பிக்கையின் அடிப்படையில் அப்பள்ளியின் எந்த ஆசிரியருக்கும் வணக்கம் செலுத்த மாட்டோம்; இக்குறிப்பிட்ட தலைமை ஆசிரியருக்கும் வணக்கம் செலுத்த மாட்டோம் என்றெல்லாம் நடப்பார்களேயானால், அதை அவர் ஏற்றுக் கொள்வாரா? இப்பள்ளியின் தலைமை ஆசிரியைப் போலவே ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும் தேசியக் கொடி ஏற்றுவதில் சாதி, மதம், இனம், அரசியல் பிரதிபலிக்குமேயானால், அவை தேச ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்காதா?

ஆகஸ்ட் 15 தேசியக் கொடி ஏற்ற மறுத்ததோடு, அதற்கு அவர் கொடுத்த விளக்கமும் எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. பேடர அள்ளி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லையெனில், இது மிகப்பெரிய தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.

தேசியக் கொடி ஏற்றுவதும், அதற்கு வணக்கம் செலுத்துவதும் இந்த தேசத்திற்கும், மக்களுக்கும் கொடுக்கக்கூடிய மரியாதை. அதில் எந்த இறை நம்பிக்கைக்கோ, இறை நம்பிக்கையின்மைக்கோ இடமில்லை. அது இந்திய தேசத்தின் ஒவ்வொரு குடிமகனின் கடமையும், உரிமையும் ஆகும். பள்ளிகளில் பிஞ்சு உள்ளங்களில் முன்னோர்களின் தியாகத்தைப் போற்றவும், தேசப்பற்றை வளர்க்கவும் வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் ஆசிரியர்கள்.

பேடர அள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தனது கடமைகளிலிருந்து முழுமையாகத் தவறிவிட்டார். அவருடைய செயல் வேலியே பயிரை மேய்வதற்குச் சமம். தமிழக அரசு அவர்மீது எவ்விதமான கருணையும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அவர் கண்டிக்கத்தக்கவர் மட்டுமல்ல, தண்டிக்கப்படக்கூடியவரும் ஆவார்.

மேலும், இந்த சம்பவம் நடைபெற்று ஏறக்குறைய நான்கு தினங்கள் கடந்தும் கூட ஏன் தமிழக அரசு அவர்மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லையெனத் தெரியவில்லை. அவர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு, தேசியக் கொடி அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன் என அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.