பதிவு : துக்ளக் சத்யா
ஒற்றைத் தலைமைக்கு ஆசைப்பட்டு ஏழெட்டு தலைமையின் பிடியில் அதிமுக வை சிக்க வைத்திருக்கிறார் எடப்பாடி. ஒற்றைத் தலைமை தேவையானதுதான். அது இயல்பாக அமைய வேண்டுமே தவிர, கரிஷ்மா இல்லாத ஒருவர் தன்னைத்தானே ஒற்றைத் தலைவராக திணித்துக் கொள்ள முயன்றால் குழப்பத்தில்தான் முடியும் என்பதற்கு இன்றைய அதிமுக நிலை உதாரணம்.
பொன்னையன் ஆடியோ அதைத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. அது என் குரலே அல்ல என்று அவர் எவ்வளவு சாதித்தாலும் யாரும் அதை நம்புவதாக இல்லை.நிர்வாகிகள் முறைகேடாக சொத்து சேர்ப்பது, எதிர் தரப்புடன் ரகசிய உறவு வைத்திருப்பது என்பதெல்லாம் பல கட்சிகளிலும் இருப்பதுதான்.
எந்தக் கட்சியின் ரகசிய ஆடியோ வெளியானாலும் கட்சியின் செயல்பாடுகள் இந்த லட்சணத்தில்தான் இருக்கும். குறிப்பாக, திமுக-அதிமுக வின் செயல்பாடுகளில் எந்த வித்தியாசமும் இருக்க வழியில்லை. அதனால் பொன்னையன் வெளியிட்டுள்ள கருத்துகளில் ஆச்சரியம் கொள்ள எதுவும் இல்லை. ஆனால், கட்சியில் அவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பகத் தன்மையையும் இழந்திருப்பதுதான் அவர் கண்ட பலன்.
தவிர, ஒற்றைத் தலைமைக்கு தேவையான அதிகார பலம் எடப்பாடியிடம் இல்லை என்பதை பொன்னையன் ஆடியோ அம்பலப்படுத்தியுள்ளது. முக்கியமாக திமுக எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டே இயங்க வேண்டிய அதிமுக, திமுக வின் தயவை எதிர்பார்த்திருப்பவர்களால் நிறைந்திருக்கிறது என்று நன்றாக தெரிகிறது. என்னதான் எடப்பாடி திமுக எதிர்ப்புக் குரல் எழுப்பினாலும் அது எடுபடுமா என்பது சந்தேகம்தான்.
இனி அதிமுகவில் ஒற்றுமை ஏற்பட்டாலும் அது இயல்பாக இருக்காது. பிரிந்திருந்தாலோ ஓட்டுப் பிளவை தவிர்க்க முடியாது. அந்த இடத்தைப் பிடிக்க பாஜக வுக்கு காலம் கனிந்திருப்பதாகவே தோன்றுகிறது.