ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தி மொழியை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக தமிழகத்தில் பெரும் விவாதம் நடந்து வருகிறது.
இதற்கெல்லாம் காரணம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் எக்காரணத்தைக் கொண்டும் இந்தியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை மக்கள் பெற்று விடக் கூடாது என்பதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக கடந்த பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. அதற்கான முயற்சி செய்து வருகிறது.
இதற்கு நேர் மாறாக மத்திய அரசும், தமிழகத்தில் மட்டுமல்ல.. இந்தியா முழுக்க நாட்டின் ஒருமைப்பாட்டை பேணிக் காப்பதற்கும் கட்டாயம் ஒரு அலுவல் மொழியாக இந்தி இருக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறது. இப்போதுவரை தேசிய மொழியாக எந்த மொழியும் இல்லை என்றாலும் அலுவல் மொழியாக பெரும்பான்மையானோர் இந்தியை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சொல்லும்போது தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பள்ளிக்கூடங்களில் இந்தி மொழி இருப்பதால் மாணவர்களும் பொதுமக்களும் கூட அதிகம் இந்தி பேச தெரிந்தவர்களாக இருக்கின்றனர்.
ஆனால் தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இந்த இரண்டு மொழிகள் மட்டுமே பேசக் கூடிய சூழ்நிலை இருக்கின்றது. இதன் காரணமாக தமிழகத்தைத் தாண்டி எக்காரணத்திற்காகவும் ஆங்கிலத்தை வைத்து மட்டுமே சமாளிக்கின்றனர். விருப்பப் படுபவர்கள் இந்தியை படித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
அதே வேளையில் இந்தி பயில முடியவில்லையே என்ற ஏக்கத்திலும் பலரும் இருக்கின்றனர். அவர்களுக்கான கல்வியும் இந்தி மொழியை கற்க கூடிய வாய்ப்பும் அரசு ஏற்படுத்திக் கொடுக்காமல் இருக்கிறது என்பதையும் பார்க்க முடிகிறது. இப்படியான ஒரு சமயத்தில் அரசியல் விமர்சகரான கிஷோர் கே சாமி, இந்தி திணிப்புக்கும், ஹிந்தி அலுவல் மொழிக்கும், ஆங்கிலத்திற்கு மாற்று ஹிந்தி என்பதையும் யாரும் தவறாக புரிந்து கொள்ளுதல் கூடாது. இவற்றுக்கு இடையேயான புரிதல் கண்டிப்பாக வேண்டும். இதற்கு முன்னதாக எந்த அறிக்கையாக இருந்தாலும் அது ஆங்கிலத்தில் இருக்கும் போது அந்தந்த மாநிலம் அவரவர் மொழிகளில் மொழிபெயர்த்து பயன்படுத்துவார்கள்.
இப்போது எந்த ஒரு மாநில மொழியையும் மத்திய அரசு விட்டுக்கொடுக்கவில்லை. மாறாக ஆங்கில மோகம் இருக்கக்கூடிய நமக்கு ஏன் தேசிய ஒற்றுமையை பேணிக்காக்க கூடிய நம் உள் நாட்டு மொழியான இந்தியை மாற்று மொழியாக பயன்படுத்த கூடாது? என்ற ஒரு ஒற்றை கருத்தை மத்திய அரசு வைத்திருக்கின்றது என குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் 70 சதவீத மத்திய அரசு திட்டங்கள் இந்தியில்தான் தயார் செய்யப்பட்டு உள்ளது என்றும், வடகிழக்கு மாநிலங்களில் பத்தாம் வகுப்பு வரை இந்தி பயிற்றுவிக்க ஒப்புக்கொண்டு உள்ளனர் என்பதையும் மேற்கோள் காட்டி அதற்காக 22 ஆயிரம் இந்தி தெரிந்த ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றது என்பதை மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.
இந்தி அலுவல் மொழியாக ஆங்கிலத்திற்கு மாற்றாக பயன்படுத்தினால் எந்த ஒரு அறிக்கையும் திட்டங்களும் இந்தியில் இருக்கும். அதனை அவரவர் மாநில மொழிகளுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம் இதில் என்ன தவறு இருக்கின்றது. ஏன் இது குறித்து நாம் ஆராயக் கூடாது இப்போதிலிருந்தே ஏன் நாம் நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கக்கூடிய, இந்தியாவிற்கு என ஒரு மொழி ஏன் இருக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார் கிஷோர்.
மேலும் இங்கு இருக்கக்கூடிய திராவிட கட்சிகள் குறிப்பாக திமுகவினர் அவர் பிள்ளைகளை இந்தியில் படிக்க வைத்து, அவர் வம்சாவழி வந்தவர்களை பாராளுமன்றத்தில் அமர்த்தி அழகு பார்க்கும்.ஆனால் சாதாரண மக்கள் கடந்த சில வருடங்களாக மற்ற மொழிகளில் படிக்க கூடிய வாய்ப்பை இழக்க வைத்திருக்கின்றனர். இது மிகப்பெரிய தவறான ஒன்று. தமிழகம் எடுத்துக்கொண்டால் மெட்ரிகுலேஷன் சிபிஎஸ்சி மற்ற சிலபஸ் பள்ளிகளில் கூட இந்தி இருக்கின்றது.
ஆனால் பாருங்கள்.. தமிழக அரசு பள்ளிகளில் மட்டும் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இந்தி படிக்கக் கூடிய வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றது. இதற்கு யார் பொறுப்பு அவர்களின் உரிமையையும் விருப்பத்தையும் மறுப்பதற்கு நீங்கள் யார் ... தமிழன்டா தமிழன்டா என கோஷம் போட்டால் சிபிஎஸ்சி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்கள் இந்தி படிக்காமலாக இருக்கின்றார்கள்.
ஆக ஒரே நேரத்தில் கல்வி கற்கக்கூடிய மாணவர்களில் வேறுபாடு ஏற்படுகின்றது. அரசுப்பள்ளி மாணவர்கள் இந்தி படிக்க வாய்ப்பு இழக்கின்றனர். தனியார் பள்ளியில் படிக்க கூடிய மாணவர்கள் இந்தியை கற்கின்றனர். பாதிக்கப்படுவது அரசு பள்ளி மாணவர்கள் தானே...இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எதற்கெடுத்தாலும் இந்தி திணிப்பு என்று ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு அரசியல் செய்வது மிக பெரிய தவறு என்பதை சுட்டிக் காட்டியுள்ளார் கிஷோர் கே ஸ்வாமி
தொடர்ந்து பேசிய அவர், தான் ஜெயிலில் சிறைவாசியாக இருக்கும் போது, அங்கிருந்த 40 பேரில் 38 பேருக்கு தமிழில் எழுத படிக்க கூட தெரியாது, அவர்கள் சார்பாக அதிகாரிகளுக்கு நான் தான் லெட்டர் எழுதுவேன்; இப்படி தான் இருக்கிறது நிலைமை.. இதுல தமிழன்டா தமிழன்டா என சொல்லி திசை மாத்துறாங்க. ஆனால் உண்மை .... தமிழன்டா என சொல்லிக்கொள்பவர்களுக்கு தமிழை பிழை இன்றி எழுத கூட தெரியாது என குறிப்பிட்டு உள்ளார் கிஷோர் கே சாமி.