மதுரை சம்பவத்திற்கு காரணமான சரவணன் மற்றும் பழனிவேல் தியாகராஜன் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பி இருக்கிறார் இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-
நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் கார்மீது செருப்பு வீச்சு சம்பவம் நடந்தது. இத்தகைய சம்பவம் நடைபெறுவதற்கு காரணமாக இருந்த டாக்டர் சரவணன் தற்பொழுது திமுகவில் இணையப் போவதாக அறிவித்துவிட்டார்.
காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் பலியான தமிழக ராணுவ வீரர் உடல் மதுரைக்கு வந்த பொழுது அஞ்சலி செலுத்தச் சென்ற பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் இந்து இயக்க சகோதரர்களை தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு நீங்கள் நடத்தலாம் என்று வெளியே நிற்க வைத்து விட்டார்கள்.
அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்களும் வெளியே காத்திருந்தார்கள். இந்நிலையில் அந்த இடத்திற்கு வருகை தந்த நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் மிகவும் தரக்குறைவாக ஒருமையில் பாரதிய ஜனதா கட்சியையும் பாஜக தொண்டர்களையும் விமர்சித்துள்ளார்.
இங்கே வந்து அஞ்சலி செலுத்துவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது என்று ஆத்திரமூட்டும் வகையில் பேசியுள்ளார். இதன் காரணமாக வெளியே பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பி டி ஆர் பழனிவேல் ராஜன் காரை மரித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பொதுமக்களும் பிஜேபினரோடு இணைந்து பழனிவேல் ராஜனுடைய காரை மரித்தார்கள்.
உள்ளே இருந்து இந்த குற்றச்சாட்டை சுமத்திய,இந்த செய்தியை வெளியே பரப்பிய பிஜேபி மாவட்ட தலைவர் திரு சரவணன் அவர்கள் அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்பட வில்லை. பழனிவேல் ராஜன் மீதும் எந்த வழக்கும் பதிவு செய்யப்பட வில்லை. ஆனால் பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை கைது செய்வது, பி ஜே பி நிர்வாகிகளின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தாரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து துன்புறுத்துவது ஆகிய காரியங்களில் மதுரை மாவட்ட காவல்துறையினர் பி டி ஆரின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டு வருகிறார்கள்.
நிதி அமைச்சர் காரில் வருகிற பொழுது காரை அவர்கள் மீது ஏற்றுங்கள் அவர்களை விடாதீர்கள் என்றெல்லாம் சத்தம் போட்டு இருக்கிறார். நிதி அமைச்சர் அங்கே பேசிய பதிவுகள் இருக்கின்றன. ஆனால் காவல்துறையினர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார்கள்.
பி டி ஆர் பழனிவேல் ராஜனின் தூண்டுதலின் பேரில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் துன்புறுத்தப்படுகிறார்கள். இந்து இயக்கங்களின் நிர்வாகிகளும் தொண்டர்களும் துன்புறுத்தப் படுகிறார்கள்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இது விஷயத்தில் தலையிட வேண்டும். காவல்துறையின் அராஜக நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் சார்பில் மதுரை மாவட்ட காவல்துறையின் கண்டித்து ஜனநாயக அறப்போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார் அர்ஜுன் சம்பத்.