24 special

கம் பேக் கொடுக்குமா அதிமுக? வெளியாகும் பரபரப்பு தகவல்!

edapadi, nirmala sitaraman
edapadi, nirmala sitaraman

கோயம்பத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிக்காக கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தராமனை, அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி, அதிமுகவுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வந்தது. இரு கட்சிகளிடமும் எந்த வித கருத்துக்களும் தெரிவிக்காத நிலையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவுடனான கூட்டணி முறிவு என்பது, கட்சி தொண்டர்களின் முடிவு என்று தெரிவித்திருந்தார். கூட்டணி முறிவுக்கு பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு நேற்று முன்தினம் சென்றிந்தது தமிழக அரசியலில் மாற்றத்திற்கான கரணம் என பார்க்கப்பட்டது.


டெல்லி சென்ற அண்ணாமலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தராமன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த பயணம் அதிமுக- பாஜக முறிவுக்கு முக்கிய முடிவு எடுப்பதற்காக இருக்கலாம்  என பேசபடுகிறது. இந்நிலையில் இன்று பாஜக துணை தலைவர்  வி.பி. துரைசாமி "கூட்டணி குறித்து நல்ல முடிவு விரைவில் கிடைக்கும் என்றும், கூட்டணியை தொடரவே டெல்லியில் பேசி வருவதாக தெரிவித்தார்". அவரை தொடர்ந்து "குறிப்பிட்ட நேரத்தில் சரியான செய்தியை டெல்லி தலைமை வெளியிடும்" என பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். இவர்களை தொடர்ந்து, அதிமுக- பாஜக கூட்டணி முற்றுப் பெறவில்லை. கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இன்று அல்லது நாளை கூட்டணி குறித்த நல்ல முடிவு வர வாய்ப்பு உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். 

கோயம்பத்தூரில்  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள்  சந்தித்து பேசினர். அதிமுக எம்.எல்.ஏக்கள் அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், ஏகே செல்வராஜ், ஆகியோர் நிர்மலா சீதாரமனை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது பாஜக தேசிய  மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனும் உடன் இருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்த நிர்மலா சீதாராமன், கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்று இருந்தனர்.இன்று நடைபெற்ற சந்திப்பின் மூலம் இபிஎஸ் சம்மதத்துடன் நடைபெற்ற சந்திப்பா? அல்லது அதிமுகவில் ஒரு ஏக்நாத் ஷிண்டேவை உருவாக்கும் முயற்சியா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் கூட்டணி முறிவு குறித்து பாஜக தலைமையில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வரவில்லை. அதிமுக பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.