24 special

இவங்களுக்கும் கோவம் வருமா அமைதியான பொண்ணு மேயர் ப்ரியாவையே கோபப்படுத்திட்டாங்களே...?

mayor priya
mayor priya

மழைக்காலம் வருவதை முன்னிட்டு சென்னையில் உட்கட்டமைப்பு பணிகள் எப்படி எல்லாம் நடைபெற்று வருகிறது என ஆய்வு செய்வதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஸ் குமார், கூடுதல் ஆணையாளர் சங்கர்லால் குமாவத், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.அப்போது மாநகராட்சி உட்கட்டமைப்பு, மழைக்காலம் வருவதை முன்னிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பகுதிவாரியாக கவுன்சிலர்களால் மேயர் பிரியா அவர்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது.அப்போது சென்னை மாநகராட்சியின் 184-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் ரவிச்சந்திரன், ``சென்னை மெட்ரோ வாட்டர் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் மிகவும் மோசமாகச் செயல்படுகிறார்கள்.


பல இடங்களில் மெட்ரோ குடிநீர் குழாய் உடைந்து, பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வசதி தடைபட்டு, பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஆனால், இது குறித்து பலமுறை புகார் அளித்தும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக, கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவே இந்தப் பிரச்னைகள் குறித்து உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டம்போட்டு அறிவுறுத்தியும், மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர்' என சரமாரியாகக் குற்றம்சாட்டினார். அதை மற்ற அனைத்து கவுன்சிலர்களும் மேசைகளைத் தட்டி ஆமோதித்தனர். இதுதான் சமயம் என மேலும் பல கவுன்சிலர்கள் எழுந்து மெட்ரோ வாட்டர் அதிகாரிகளின் போக்கை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்து குற்றம்சாட்டினர். அப்போதே மேயர் பிரியா லேசாக டென்ஷன் ஆனார்.இந்த சம்பவத்தை தொடர்ந்து மெட்ரோ வாட்டர் அதிகாரிகள்களை அழைத்து விளக்கம் கேட்ட மேயர் பிரியா, ``அமைச்சர் சொல்லியும் கேட்கமாட்டீர்களா... ஒருமுறை நேரில் சென்று ஆய்வு செய்தால்தான் என்ன... நீங்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காததால்தான் இத்தனைப் பேர் புகார் சொல்கின்றார்கள். இனி இதுபோல் நடக்கக் கூடாது.

அடுத்த மாமன்றக் கூட்டத்துக்குள் மெட்ரோ வாட்டர் பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டும்!" என அதிகாரிகளுக்கு ரொம்ப கோவமாக உத்தரவிட்டார்.மேலும் அதைத் தொடர்ந்து, 151-வது வார்டு கவுன்சிலர் சங்கர் கணேஷ், "எனது வார்டில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஒழுங்காக பணிக்கு வருவதில்லை! காலை 8 மணிக்கு வரவேண்டிய டாக்டர்கள் 9:30 மணியாகியும் வராமல் இருக்கின்றனர். இதனால் குழந்தைகளும், பொதுமக்களும் போதிய நேரத்தில் மருத்துவம் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்' என கோரிக்கை விடுத்தார்.தொடர்ந்து மாநகராட்சியின் 81-வது வார்டு கவுன்சிலரும், நிலைக்குழுத் தலைவருமான (பொது சுகாதாரம்) டாக்டர் சாந்தகுமாரி, "எனது வார்டில் உள்ள கல்யாணபுரம் தொடக்கப்பள்ளி கட்டடம் மிகவும் பழுந்தடைந்த நிலையில் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பாக, பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டித்தரப்பட வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.நிறைவாக கவுன்சிலர்களின் கோரிக்கைக்கு பதிலளித்துப் பேசிய மேயர் பிரியா ராஜன் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். "அதிகாரிகளுக்கும் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... இரண்டு கைகளையும் தட்டினால்தான் சத்தம் வரும். அதேபோல கவுன்சிலர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டால்தான் மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைக்கமுடியும்.

டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அனைத்து மண்டலங்களிலும் நடைபெற்று வருகிறது. அதிகாரிகள், பணியாளர்கள், கவுன்சிலர்கள் என அனைவரும் களத்தில் இறங்கி செயல்படுகின்றீர்கள்; அது பாராட்டுக்குரியது. அதேசமயம், கவுன்சிலர்கள் டெங்கு விழிப்புணர்வு பதிவுகளை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடவேண்டும். குறிப்பாக, டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, கொசு ஒழிக்கும் முறைகளைப் பற்றி பேசி வீடியோவாகப் பதிவிட வேண்டும். அது போன்ற வீடியோக்களை நாங்களே உருவாக்கித் தருகிறோம்!" என்றார்.இந்த சம்பவத்தின் பின்னணியை விசாரித்தபோது வரும் மழைக்காலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டால் கண்டிப்பாக அது தேர்தலில் எதிரொலிக்கும் அதன் காரணமாக மேயர் பிரியாவிற்குத்தான் இது கெட்ட பெயரை ஏற்படுத்தித்தரும். எனவே இதன் காரணமாகத்தான் இதுவரை கோவப்படாத மேயர் பிரியா கோவப்பட்டார் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.