
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்போதைய மோதல்கள் மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் வரைபடத்தையே மாற்றி அமைத்து வருகின்றன. இதில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக, ஐக்கிய அரபு அமீரகத்தை பாதுகாக்க இஸ்ரேல் தனது புகழ்பெற்ற 'அயன் டோம்' பாதுகாப்பு அமைப்பையும், அதை இயக்குவதற்குத் தனது வீரர்களையும் அங்கு அனுப்பி வைத்திருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மத ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே எப்போதும் ஒரு தீராத பகை இருந்து வரும் சூழலில், இந்த ராணுவ ஒத்துழைப்பு என்பது ஒரு சாதாரண நிகழ்வல்ல; இது ஒரு வரலாற்று அதிசயம்.
பொதுவாக, அரபு நாடுகள் இஸ்ரேலுடன் ஒரு மென்மையான போக்கைக் கடைப்பிடித்தாலும், வெளிப்படையாகத் தற்காப்பு உறவுகளை வைத்துக் கொள்ளத் தயங்கும். ஆனால், ஈரானின் 600-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அமீரகத்தின் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக மாறியபோது, அந்தச் சிற்றரசுக்கு ஆதரவாக இஸ்ரேல் கரம் நீட்டியுள்ளது. அமெரிக்காவையே நம்பியிருந்த அரபு தேசங்கள், இப்போது இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பமே தங்களைக் காக்க வல்லது என்பதை உணர்ந்துள்ளன.
இஸ்ரேலின் இந்த உதவியால் அமீரகம் பெரும் அழிவிலிருந்து தப்பித்துள்ளது. இதன் காரணமாக, "இந்த உதவியை ஒருபோதும் மறக்க மாட்டோம்" என்று அமீரகத் தலைமை நன்றி தெரிவித்துள்ளது.; இனி வரும் காலங்களில் இஸ்ரேல் மற்றும் அமீரகத்திற்கு இடையிலான உறவு ராணுவ ரீதியாகப் பல மடங்கு வலுப்பெறப் போகிறது. ஒரு இஸ்லாமிய நாட்டின் எல்லைக்குள் இஸ்ரேலியப் படைகள் தடம் பதிப்பது இதுவே முதல்முறை. இது ஈரானுக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இஸ்ரேலுக்கு இது ஒரு மாபெரும் ராஜதந்திர வெற்றி.ஈரானுக்குப் பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது அதேபோல, இந்தியாவைப் பொறுத்தவரை இது மிகவும் சாதகமான சூழலாகும். ஏற்கனவே இந்தியாவிற்கும் அமீரகத்திற்கும் மிக நெருக்கமான உறவு இருக்கும் நிலையில், இப்போது இஸ்ரேலும் அங்கே இணைந்திருப்பது இந்தியாவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கு வலு சேர்க்கும்.
இந்த மாற்றத்தைக் கண்டு பாகிஸ்தான் போன்ற நாடுகள் கடும் அதிர்ச்சியில் உள்ளன. இஸ்ரேலியப் படைகள் அமீரகம் வரை வந்துவிட்டதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. உண்மையில், ஈரானின் தாக்குதல்கள் இஸ்ரேலைத் தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக, அதற்குப் புதிய நண்பர்களைத் தேடித்தந்துள்ளன. ஈரானின் 'முல்லாக்கள்' செய்த மிகப்பெரிய தவறு, ஒரு இஸ்லாமிய தேசத்தையும் இஸ்ரேலையும் பிரிக்க முடியாத நண்பர்களாக மாற்றியதுதான். இந்த புதிய கூட்டணி மத்திய கிழக்கின் எதிர்காலத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
