உத்திர பிரதேச மாநில டிஜிபியை அதிரடியாக டிஜிபி பதவியில் இருந்து நீக்கி அம்மாநில உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது, இதற்கு முக்கிய காரணமாக இரண்டு விஷயங்கள் கூறப்படுகிறது ஒன்று மீண்டும் பாஜக ஆட்சிக்கு வராது என எதிர்க்கட்சிகளுடன் நட்புறவில் இருந்ததாக கூறப்படுவது.
மற்றொன்று புல்டோசர் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்தது என இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது, இதனிடையே, உத்தரபிரதேச டிஜிபியாக முகுல் கோயல் பொறுப்பேற்றது முதலாகவே அவருக்கும், அமைச்சர்கள் பலருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அமைச்சர்களின் உத்தரவுகளுக்கு மாறாக அவர் செயல்படுவதாகவும், தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகவும் அவர் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.
ஒருகட்டத்தில், இந்த விவகாரம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கவனத்துக்கு செல்லவே, முகுல் கோயலை அழைத்து அவரும் கண்டித்ததாக தெரிகிறது.இருந்தபோதிலும், தனது செயல்பாடுகளை முகுல் கோயல் மாற்றிக் கொள்ளவில்லை. சில நேரங்களில் முதல்வரின் உத்தரவுகளுக்கு கூட அவர் பணிவதில்லை என்ற சூழல் உருவானது.
இதன் உச்சக்கட்டமாக, கடந்த வாரம் முதல்வர் யோகி தலைமையில் நடைபெற்ற சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை டிஜிபி முகுல் கோயல் புறக்கணித்தார். இது, முதல்வருக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், டிஜிபி முகுல் கோயல் டிஜிபி பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவும்,
அவர் ஊர்க் காவல் படை இயக்குநராகமாற்றப்படுவதாகவும் உத்தரபிரதேச உள்துறை அமைச்சகம் நேற்று இரவு உத்தரவிட்டது. அரசின் உத்தரவுகளை செயல்படுத்தாமல் இருந்தது; பணியில் ஆர்வம் இல்லாமல் இருந்தது போன்ற காரணங்களுக்காக அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அந்த உத்தரவில் உ.பி. அரசு தெரிவித்துள்ளது.
மாநில டிஜிபி நீக்கப்படுவது என்பது மிக பெரிய முடிவு என்பதால் இந்த முடிவுகள் காவல்துறை வட்டாரத்தில் பல்வேறு அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.