பாஞ்சஜன்யா', 'ஆர்கனைசர்' ஊடகங்கள் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் உபி முதல்வர் யோகி கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் இது குறித்து யோகி தெரிவித்ததாவது "பல மாநிலங்களில் தேர்தல் முடிந்ததும் கலவரங்கள் நடந்தன.ஆனால், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலின்போதும், அதற்குப் பின்னரும் எந்தக் கலவரமும் நடைபெறவில்லை. உத்தரப்பிரதேசத்தில் தேர்தலின்போதும், அதற்குப் பிறகும் கலவரம் எதுவும் நடக்கவில்லை.
அதேபோல மாநிலத்தில் பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததும், அனைத்து சட்டவிரோத இறைச்சிக் கூடங்களையும் மூடியது. பின்னர் தெருக்களிலும் வயல்களிலும் சுற்றித் திரியும் கால்நடைகள் சட்டவிரோத இறைச்சிக் கூடங்களுக்குக் கடத்தப்பட்டன.
இந்த சவாலை எதிர்கொள்ள. 5,600-க்கும் மேற்பட்ட கால்நடை காப்பகங்களை நாங்கள் அமைத்துள்ளோம். பசுவின் சாணத்திலிருந்து சி.என்.ஜி தயாரிக்கும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுவருகிறது.அதற்காக மக்களிடமிருந்து பசுவின் சாணத்தைக் கிலோ ஒன்றுக்கு 1 ரூபாய்க்கு வாங்கப்படும்.
பா.ஜ.க அரசு அமைந்ததும் ராம நவமி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அனுமன் ஜெயந்தி கொண்டாட்டங்கள் அமைதியாக நடந்து முடிந்தன. இதே உத்தரப்பிரதேசத்தில்தான் முன்பு சிறு சிறு பிரச்னைகள் கலவரத்துக்கு வழிவகுத்தன.
முஸ்லிம்களின் பெருநாள் தொழுகை சாலையில் நடத்தப்படுவதில்லை என்பதை நீங்கள் முதன்முறையாகப் பார்த்திருப்பீர்கள். இப்போது, உத்தரப்பிரதேசத்தில் உள்ள மசூதிகளின் ஒலிபெருக்கிகளின் ஒலி தற்போது குறைக்கப்பட்டுள்ளது அல்லது ஒலிபெருக்கி முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. அவ்வாறு அகற்றப்படும் ஒலிபெருக்கிகள் பொது அமைப்புகளுக்கும், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் நன்கொடையாக வழங்கப்படுகின்றன.
பசுக்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. பா.ஜ.க ஆட்சியில்தான் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயிலும், புதுப்பிக்கப்பட்ட காசிவிஸ்வநாதர் கோயில் வளாகமும் கட்டப்பட்டன.
உத்திரப்பிதேச மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், புனித யாத்திரை தலத்தை அரசு மேம்படுத்திவருகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்யும் `இரட்டை இயந்திரம்’ அரசாங்கத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தின் பொருளாதார முன்னேற்றம் பெரிதும் உயர்ந்துள்ளது" எனக் குறிப்பிட்டார்.