பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைத்துள்ள சூழலில் தற்போது புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அது பின்வருமாறு :-
மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருப்பதுதான் ‘மாநில சுயாட்சியா’? மாடல் ஆட்சியா?பெட்ரோல், டீசல், காஸ் ஆகியவற்றின் அபரிமிதமான விலை உயர்வின் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவது மட்டுமல்ல, அதனால் இந்தியப் பொருளாதாரமே முடங்கும் அபாய சூழல் உருவாகி உள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 9.50-ம், டீசலுக்கு ரூபாய் 7-ம் விலை குறைப்பு செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இவ்விலை குறைப்பு பெரும் பலன் எதையும் தந்துவிடாது எனினும், இது நல்லதொரு முன்னெடுப்பு என்ற அடிப்படையில் இதை வரவேற்கிறோம்.
அதே சமயத்தில், பெட்ரோல் விலையைக் குறைத்த மத்திய அரசு; காஸ் விலையைக் குறைக்காமல், ஏற்கனவே உள்ள மானியமே தொடரும் என அறிவித்து இருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் ’மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்து, விலை உயர்வைக் குறைக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தி இருந்தோம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் மத்திய, மாநில அரசுகளின் அபரிமிதமான வரி விதிப்பின் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை எந்த ஒரு இந்தியக் குடிமகன்களாலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கச்சா எண்ணெய் அடக்க விலை, சுத்திகரிப்பு,
விற்பனையாளர் கமிஷன் உட்பட லிட்டருக்கு 49 சதவிகிதம் மட்டுமே செலவினம் என்கின்றபோது மத்திய, மாநில அரசுகள் 51 சதவிகித வரியை ஏன் பெட்ரோலிய பொருட்கள்மீது திணிக்க வேண்டும்? இந்த விஷயத்தில் மத்திய அரசுமீது மாநில அரசு பழிபோடுவதும்; மாநில அரசுமீது மத்திய அரசு பழி போடுவதும் மட்டுமே வாடிக்கையாக உள்ளது.
உக்ரைன் - ரஷ்யப் போர் காரணமாக ஒரு சில குறிப்பிட்ட வாரங்களில் மட்டுமே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. ரஷ்யாவிடமிருந்து முன்பு வாங்கியதைக் காட்டிலும் இப்பொழுது இரண்டு மடங்கு கச்சா எண்ணெய்யை சர்வதேச சந்தை நிலவரத்தைக் காட்டிலும் பாதிக்கும் குறைவான விலையில் வாங்குகிறோம். எனவே, முன்பு 49 சதவிகிதமாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் உற்பத்திக்கான செலவு இப்பொழுது 15 - 20 % குறைந்து 35 சதவிகிதமாகக் குறைகிறது.
இன்றைய நிலவரப்படி, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் ஏற்படக்கூடிய நேரடி பலனை மக்களுக்கு அளித்தாலே சாதாரணமான ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 15 முதல் 20 வரையிலும் குறைக்கலாம். மத்திய அரசு தன்னுடைய வரியை 29 சதவீதத்திலிருந்து குறைக்கும் பட்சத்தில் பெட்ரோல், டீசல் விலையை 70 - 80 ரூபாய்க்குள் நிறுத்த முடியும். மாநில அரசுகளும் தங்களுடைய வரிவிதிப்பைக் குறைத்தால் ரூ 50-60க்குள் பெட்ரோல், டீசல் விலையைக் கொண்டு வர முடியும்.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கின்ற போதெல்லாம் பெரும்பாலான மாநிலங்களில் அதே அளவு மாநில அரசுகளும் விலையைக் குறைத்து அந்த பலன் மக்களுக்குச் சென்றடைய நடவடிக்கை எடுக்கின்றன. ஆனால், இரண்டு முறை மத்திய அரசு தன்னுடைய பங்கிற்கு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்த போதும் கூட தமிழ்நாடு அரசு துவக்கத்தில் 4 முதல் 5 ரூபாய் குறைத்து விட்டு அதன் பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் மத்திய அரசைக் குறை சொல்வதிலேயே குறியாக இருக்கிறது.’ சிலரை சில காலம் ஏமாற்றலாம்; பலரை சில காலம் ஏமாற்றலாம்;
எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது’. மத்திய அரசு எவ்வளவு வரியைக் குறைக்கிறதோ அதற்கு ஏற்ப தமிழ்நாடு அரசும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் மத்திய அரசைக் குறை சொல்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் இனிமேலும் மக்கள் ஏமாற மாட்டார்கள்.
மேற்கத்திய நாடுகள் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் சிக்கித் தவிக்கின்றன. ரஷ்யாவின் தயவால் ஓரளவிற்கு நாம் தாக்குப்பிடிக்கின்றோம். அண்டை நாடுகளும் மேற்கத்திய நாடுகளும் தடுமாற்றம் காணுகின்ற இந்தச் சூழலில் பெட்ரோல், டீசல் பொருட்களுக்கான விலையைத் தீர்மானிப்பதில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய ஒரு சரியான அணுகு முறையை உருவாக்கி, விலைக் குறைப்பு நடவடிக்கையை அமலுக்குக் கொண்டுவந்தால் இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய அளவிற்கு எழுச்சியைப் பெறுவதற்கும், முன்னேறிச் செல்வதற்கும் இதுவே அடித்தளமாக அமையும்.
ஜி.எஸ்.டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வந்தால்தான் விலையைக் குறைக்க முடியும் என்று மத்திய அரசு கருதுமேயானால், ஜி.எஸ்.டி கவுன்சிலை உடனடியாக கூட்டி இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இதுவரை பெட்ரோலிய பொருட்களின் விலையை எண்ணெய் கம்பெனிகள் தான் தீர்மானிக்கின்றன என்று சொல்லிவந்த மத்திய அரசால் இப்பொழுது ’மத்திய அரசே நேரடியாகக் குறைக்க முடியும்’ என்ற சூழல் உருவாகின்றபொழுது, இனிமேல் விலை நிர்ணயத்தை எண்ணெய் கம்பெனிகளின் அதிகாரத்திற்கு விடாமல் மத்திய அரசே பெட்ரோலியப் பொருட்களின் விலையைத் தீர்மானிக்கக்கூடிய அந்த நடைமுறையை மீண்டும் அமலுக்குக் கொண்டு வர வேண்டும். இப்பொழுது சாதாரணமாக தினச் சம்பளத்திற்குச் செல்லக்கூடிய தொழிலாளர்கள் முதல் மாதச் சம்பளத்திற்குச் செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வரையிலும் நிலையற்ற பெட்ரோலிய பொருட்கள்மீதான விலையேற்றத்தால் நிலை தடுமாறுகிறார்கள்.
’புகை வீட்டுக்குப் பகை’ என செய்த பிரச்சாரத்தை நம்பி காஸ் அடுப்புக்கு மாறியவர்கள் அபரிமிதமான காஸ் விலை உயர்வால் அதை உதறித் தள்ளிவிட்டு மீண்டும் விறகு அடுப்புக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. ’அளவு மாற்றங்கள், குண மாற்றத்தை நிகழ்த்தும்’. இன்றைய மத்திய அரசு சாலைகள் போடலாம்; பாலங்கள் கட்டலாம்; ராணுவத்தைப் பலப்படுத்தலாம். ஆனால், இவைகள் எல்லாம் சாதாரண மக்களுடைய கண்களுக்கு எளிதாக தெரியாது. தங்களுடைய உழைப்பின் பெரும்பகுதி பெட்ரோல் நிலையங்களில் கரைந்து போகின்றது என்பதைக் கண்ணுறக் கூடியவர்கள்,
விறகடுப்பு தொல்லை தொலைந்தது என்று மகிழ்வோடு இருந்தவர்களுக்கு மீண்டும் விறகடுப்புக்கு மாறி கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை காலப்போக்கில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை உருவாக்கும். இப்பொழுது லிட்டருக்கு ரூபாய் 9.50-ம், டீசலுக்கு ரூ 7-ம் குறைத்து விட்டு, அடுத்து ஒரு வாரம் கழித்து தினமும் 10, 50 பைசா என உயர்த்தி மீண்டும் அதே நிலையை எட்டுவது என்பது பெரும் ஏமாற்றமாகவே அனைத்து மக்களும் கருதுவார்கள்.
எனவே, பெட்ரோல், டீசல், காஸ் பொருட்கள்மீது நியாயமான வெளிப்படைத்தன்மையான, விலை நிர்ணயம் செய்யும் வழிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக காண வேண்டும். மத்திய அரசின் தற்போதைய பெட்ரோல், டீசல் மீதான விலை குறைப்பு வெறும் கண்துடைப்பாக இருந்து விடாமல், பெரும் மாற்றத்திற்கான நல்லதொரு தொடக்கமாக அமைய வேண்டும். மத்திய அரசின் வரி விதிப்பு மற்றும் விலை குறைப்பு மீதான நடவடிக்கைகளை நேர்மையான; நியாயமான முறையில் மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்து தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.
மத்திய அரசு, ஒரு வருடத்தில் இருமுறை பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து இருக்கிறது!ஆனால், தமிழ்நாடு அரசு விலையைக் குறைக்காமல், மத்திய அரசைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பதுதான், மாநில சுயாட்சியா? மாடல் ஆட்சியா? திமுக அரசே.! வாய்ச்சவடால் வேண்டாம்! விலையைக் குறைத்திடு என குறிப்பிட்டுள்ளார் கிருஷ்ணசாமி.