
உலக அரசியலின் திசையைத் தீர்மானிக்கும் சக்தியாக பாரதம் உருவெடுத்துள்ள விதம் இன்று உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் சமீபத்திய இந்தியப் பயணம் வெறும் ஒரு அரசுமுறைப் பயணமாக மட்டும் அமையாமல் இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை நிலைநிறுத்தும் ஒரு வரலாற்று நிகழ்வாக மாறியுள்ளது. அபுதாபியில் இருந்து இந்தியா வருவதற்கு எடுத்துக்கொண்ட பயண நேரத்தை விடவும் மிகக் குறைந்த நேரமே அவர் பாரத மண்ணில் செலவிட்டிருந்தாலும் அந்தச் சில மணிநேரங்கள் உலக அரசியலில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. பிரதமர் மோடி அவர்கள் விமான நிலையத்திற்கே நேரடியாகச் சென்று அமீரக அதிபரை வரவேற்று ஒரே காரில் அழைத்துச் சென்றது இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஆழமான நட்பையும் பரஸ்பர மரியாதையையும் பறைசாற்றுகிறது.
இந்தச் சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திபூர்வ கூட்டாண்மை என்பது ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வர்த்தக ரீதியாகப் பார்த்தால் வரும் 2032-ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை இருநூறு பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது இந்தியாவின் பொருளாதார வலிமைக்குச் சான்றாகும்.
எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் மிகவும் வியக்கத்தக்கது. திரவ இயற்கை எரிவாயு கொள்முதல் தொடர்பான புதிய ஒப்பந்தத்தின் மூலம் கத்தாருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய விநியோக நாடாக அமீரகம் மாறியுள்ளது இந்தியாவின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பெரிதும் உதவும். இது தவிர டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பாரதம் அடைந்துள்ள புரட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் டிஜிலாக்கர் வசதிகளை அமீரகத்துடன் இணைப்பதன் மூலம் எல்லைகளைத் தாண்டிய தொழில்நுட்பப் பரிமாற்றம் சாத்தியமாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள தோலேரா சிறப்பு முதலீட்டுப் பகுதி மற்றும் கிஃப்ட் சிட்டி ஆகியவற்றில் அமீரக நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்திருப்பது இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் நிதித்துறையில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. ரயில்வே இணைப்பு, துறைமுக மேம்பாடு மற்றும் விமானி பயிற்சி வசதிகள் எனப் பல்வேறு துறைகளில் அமீரக நிறுவனங்களின் பங்களிப்பு இந்தியாவை உலகத் தரத்திலான ஒரு உற்பத்தி மையமாக மாற்றும் என்பதில் ஐயமில்லை. அதேபோல் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குவதில் இரு நாடுகளும் கைகோர்த்திருப்பது வரும் காலத்தில் இந்தியா விண்வெளித் துறையில் ஒரு உலகத் தலைவராக மிளிர வழிவகுக்கும்.
பாதுகாப்பு மற்றும் அணுசக்தித் துறைகளில் பாரதம் எடுத்து வரும் நடவடிக்கைகள் அதன் ராஜதந்திரத்திற்குச் சூட்டிய மகுடமாகத் திகழ்கின்றன. மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் சமரசமற்ற நிலைப்பாட்டை ஐக்கிய அரபு அமீரகம் முழுமையாக ஆதரிப்பதோடு பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பவர்களுக்கும் புகலிடம் அளிப்பவர்களுக்கும் எதிராகக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவை ஒரு நம்பகமான பாதுகாப்புத் துணையாக அமீரகம் கருதுவது பாரதத்தின் செல்வாக்கை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் மற்றுமொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தியா தனது அண்டை நாடுகளுடனான சவால்களைத் திறம்படக் கையாண்டு கொண்டே உலக நாடுகளைத் தன்பக்கம் ஈர்க்கும் வல்லமையைப் பெற்றுள்ளது என்பதாகும். வல்லரசு நாடுகளுக்கே சவால் விடும் வகையில் இன்று பாரதத்தின் குரல் சர்வதேச மேடைகளில் ஒலிக்கிறது. இந்தியாவின் இந்த அபார வளர்ச்சி என்பது வெறும் பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இல்லாமல் உலக அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் ஒரு அறநெறி சார்ந்த வளர்ச்சியாக அமைந்திருப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை தரும் விஷயமாகும்.
