கேரளா : கேரள முதல்வரான பினராயிவிஜயன் அரசுமுறைப்பயணமாக கடந்த திங்கட்கிழமை கண்ணூரில் இருந்து திருவனந்தபுரம் சென்றார். அப்போது விமானத்தில் இருந்த இருவர் முதல்வர் பினராயி விஜயனை தாக்க முயன்றதாக கூரப்பப்டுகிறது. விசாரணையில் அவர்கள் இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை மாலை கண்ணூரில் இருந்து திருவந்தபுரத்திற்கு முதல்வர் பினராயி விமானத்தில் பயணம் செய்தார். அப்போது விமான படிக்கட்டுகளின் அருகே இருந்த இருக்கைகளில் இருந்த இருவர் திடீரென எழுந்து முதல்வருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி நெருங்கிவந்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் முதல்வர் பினராயிக்கு எதிராக விமானத்திற்குள் அத்துமீறி நடந்த இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மீது வலியத்துறை போலீசார் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 307, 332,334 மற்றும் 120 பி ன் படி வழக்கு பதிவுசெய்துள்ளனர். மேலும் கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டதோடு விமான விதிகளை மீறியதாகவும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய காங்கிரசார் " அந்த இளைஞர்கள் கருப்பு சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளதுடன் முதல்வர் சம்மந்தப்பட்டிருக்கும் தங்க கடத்தல் வழக்கு குறித்து முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இதற்க்கு கொலை முயற்சி வழக்கு பதிந்திருப்பது முதல்வரின் சர்வாதிகாரப்போக்கையே காண்பிக்கிறது.
இது ஜனநாயக நாடா இல்லை ஒரு சர்வாதிகாரியின் நாடா" என கேள்வியெழுப்பியுள்ளனர். ஆனால் கம்யூனிஸ்ட் தரப்பில் ராஜ்யசபா எம்பியான டாக்டர் சிவதாசன் சிவில் விமானபோக்குவரத்து இயக்குனர் ஜெனரலாக அருண்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் "கேரள முதல்வரை உடல்ரீதியாக தாக்கும் கொடூர முயற்சி செய்து அவரது உயிருக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.