24 special

அக்னி வீரர்களுக்கு அசத்தலான வாய்ப்புக்கள்..! கப்பல் போக்குவரத்துத்துறை கொடுத்த ஸ்வீட்..!

Indian navy
Indian navy

புதுதில்லி : இந்திய ஆயுதப்படைகளுக்கு அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து சர்ச்சைகள் கிளப்பப்பட்டுள்ள நிலையில் ராணுவத்தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் எதிர்கால பயன்கள் குறித்து எடுத்துரைத்து வருகின்றனர். 


இந்த திட்டத்தின் மூலம் அக்னிவீரர்கள் ஆகும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் பயிற்சி முடிந்த பின்னர் பாதுகாப்பு படை தொடர்பான பணிகளில் மற்றும் பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் உத்திரபிரதேச மாநில அரசு மாநில காவல்துறை மற்றும் முக்கிய பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. அதேபோல கோவா அசாம் உள்ளிட்ட மாநிலங்களும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இந்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் " அக்னிவீர்ஸ் திட்டத்தின் மூலம் பயிற்சி முடிந்த இளைஞர்களுக்கு இந்திய கடற்படையில் இருந்து வணிககடற்படையில் சான்றளிக்கப்பட்ட மதிப்பீட்டு மாறுதல் வழங்கப்படும். மின்தொழில் நுட்ப மதிப்பீடுகள் மாறுதலும் வழங்கப்படும்.

இந்திய கடற்படையில் சமையல்காரராக பணிபுரிந்து வணிக கப்பற்படையில் சமையல்காரராக மாற சான்றிதழ் வழங்கப்படும். இந்திய கடற்படையில் தரவரிசையில் சான்றிதழ் வழங்கப்படும். மெக்கானிக்கல் எஞ்சினீரியரிங் டிப்ளமோ அல்லது எலெக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ ட்ரேட் சான்றிதழும் வழங்கப்படும். மேற்சொன்ன கல்வித்தகுதியுடன் சேர்தல் அல்லது இந்திய கடற்படையில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் சேர்ந்தால் அவர்களுக்கு மேற்சொன்ன சான்றிதழ்கள் வழங்கப்படும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணமாக 17 வயது இளைஞர் ஒருவர் பாதுகாப்பு படையில் பணியில் சேரும்பட்சத்தில் அவரது தகுதிக்கேற்ப அந்த நான்கு வருடங்களுக்கான தொழிற்கல்வி சான்றிதழ் அல்லது தொழிநுட்ப பிரிவு சான்றிதழ் அல்லது ஏதாவது ஒரு டிகிரி சான்றிதழ் வழங்கப்படும். இதனால் பணியில் சேரும் இளைஞர்கள் தங்கள் மேற்படிப்பை தொடர வாய்ப்பளிக்கும் வகையில் இந்த திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

தற்போது கப்பல் மற்றும் துறைமுக அமைச்சகம் ஆறு விதமான பிரிவுகளில் அக்னிபாத் வீரர்களுக்கு முன்னுரிமை அளித்திருப்பதோடு கல்வி சான்றிதழ் தருவதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளது.