24 special

ரஷ்யாவிடமிருந்து ஒதுங்கும் இந்தியா..? காரணம் என்ன..?

Modi, valdimir putin
Modi, valdimir putin

புதுதில்லி : இந்தியா தனது இறக்குமதிகளுக்கு ரஷ்யாவையே சார்ந்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறது. அதிலும் குறிப்பாக பெரும்பாலும் ஆயுத இறக்குமதிகளில் ரஷ்யாவையே சார்ந்துள்ளது. குறிப்பாக உக்ரைனில் போர் தொடங்கிய நாள் முதல் இந்தியாவின் நட்புநாடுகளில் அதிகமாக ரஷ்யாவையே இறக்குமதி கூட்டாளியாக கொண்டிருக்கிறது.


இதனால் ரஷ்ய ஆயுத இறக்குமதிகளை சார்ந்திருக்கும் நிலையை குறைக்க இந்தியா தனது நட்புநாடுகளான அமெரிக்கா இஸ்ரேல் ஐரோப்பாவிடம் ஆயுதங்களை வாங்க பரிசீலித்து வருகிறது. உக்ரைனுடனான போரானது ரஷ்யாவை சீனாவிடம் நெருக்கம் கொள்ளச்செய்துள்ளது. இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீனாவுடன் ரஷ்யா நெருங்குவது இந்தியாவை கவலைகொள்ள செய்திருக்கிறது.

இதனாலேயே ரஷ்யா சார்பை குறைக்க புதுடெல்லி வட்டாரங்கள் ஏதுவான வழிகளை பரிசீலிக்கிறது. ஜூன் முதல்வாரத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரான பெஞ்சமின் காண்ட்ஸ் இந்தியா வந்தபோது பாரதபிரதமர் மோடியை சந்தித்திருந்தார். அந்த சந்திப்பில் பிரதமர் மோடி அவர்கள் " இஸ்ரேலிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது உற்பத்தி மையத்தை தொடங்க முன்வரவேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.

ஏற்கனவே சமீபகாலமாக குறிப்பாக 2014க்கு பிறகு பாதுகாப்பு விஷயங்களில் இந்தியா மற்றும் இஸ்ரேலுக்கிடையேயான பரஸ்பர ஒத்துழைப்புக்கள் அதிகரித்துள்ளது. அதேபோல கடந்த மே மாதம் பிரதமர் மோடி ஐரோப்பிய கண்டத்திற்கு அரசுமுறை பயணமாக சென்றிருந்தார். அங்கு பிரெஞ்சு ஜனாதிபதியான மேக்ரூனை சந்தித்திருந்தார். 

அந்த சந்திப்பின்போது மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் உட்பட சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். ஜப்பான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய குவாட் உச்சி மாநாட்டை தொடர்ந்து அமெரிக்க அதிபரான ஜோ பிடனை பிரதமர் மோடி சந்தித்திருந்தார். 

அந்த சந்திப்பில் அமெரிக்காவிடம் இருந்து குறைந்த விலைக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவது இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் இந்திய பாதுகாப்பு நிறுவனங்களில் தங்களது ஒத்துழைப்பை வழங்குவது குறித்து இரண்டரை மணிநேரங்களுக்கு மேலாக விவாதிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன. புதுதில்லியில் அமைந்துள்ள ரிசர்ச் பவுண்டேசனின் வெளியுறவுக்கொள்கை துணை தலைவர் ஹர்ஷ் பந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

" உக்ரைனில் நிலவும் சூழலால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளில் இருந்து இந்தியா கற்றுக்கொண்ட மிக மிக முக்கியமான பாடம் எந்த ஒரு நாட்டையும் சார்ந்திருப்பது மிகவும் மோசமானது. இஸ்ரேல் அமெரிக்கா பிரான்சு போன்ற பிறநாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ரஷ்யாவை மட்டுமே நம்பியிருப்பதை குறைக்க இந்தியாவிற்கு உதவும்" என ஹர்ஷ் பந்த் தெரிவித்தார்.