24 special

பத்திரிக்கையாளருக்கு நேர்ந்த சோகம்..! கப்சிப் கெஜ்ரிவால் !

Kejriwal
Kejriwal

புதுதில்லி : அரசியல்வாதிகளின் இலவசங்கள் குறித்த வாக்குறுதியால் இந்திய பொருளாதாரம் மெல்லமெல்ல சரிந்து கொண்டிருக்க தில்லி முதல்வர் கெஜ்ரிவால் முடியாத இலவசங்களை அறிவித்து தனது சுயவிளம்பரத்திற்க்காக கோடிக்கணக்கில் அரசு கஜானாவை காலிசெய்து கொண்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பிவருகிறது.


தனது விளம்பரத்திற்க்காக கெஜ்ரிவால் செய்த செயல் தற்போது அவரை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 26 அன்று இம்பீரியல் ஹோட்டலில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெற்றது.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள ஹிந்துஸ்தான் போஸ்ட் எனும் செய்திநிறுவனத்தை சேர்ந்த நரேஷ் வாட்ஸ் என்பவர் இம்பீரியல் ஹோட்டலுக்கு வந்திருந்தார். அவரை தடுத்த பஞ்சாப் காவல்துறையினர் அவரிடம் அடையாள அட்டையை காண்பிக்க சொல்லியதாக தெரிகிறது. இருந்த போதிலும் பஞ்சாப் காவல்துறையினர் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். மேலும் அவரை வாய்மொழியாக திட்டியதாகவும் உடல்ரீதியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து டெல்லி போலீசாரிடம் நரேஷ் புகாரளித்தார். முதல்வர்கள் இருவருக்கும் தாக்குதல் குறித்து தகவலளிக்கப்பட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என நரேஷ் கூறியுள்ளார். சம்பவத்தை அறிந்த பிரஸ் க்ளப் ஆப் இந்தியா மற்றும் சண்டிகார் பிரஸ் க்ளப் ஆகியவை பத்திரிக்கையாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

மேலும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன. இதைத்தொடர்ந்து டெல்லி போலீசார் பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து எவ்வித அறிக்கையும் இரு முதல்வர்களும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.