தமிழகத்தில் திமுக தேர்தல் வாக்குறுதியாக மகளிர் உரிமைத்தொகை கொடுத்த விவகாரம் தான் தற்பொழுது திமுகவிற்கே முடிவுரை எழுத ஆரம்பித்து விட்டது என பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தொகை வழங்குவோம் என தேர்தல் சமயத்தில் பரப்புரை செய்த திமுக பின்னர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு தகுதி வாய்ந்த தலைவிகளுக்கு கொடுக்கப்படும் என அறிவித்தார். அப்பொழுதே இந்த அறிவிப்பு காரணமாக பல சர்ச்சைகள் எழுந்தது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலம் விண்ணப்பங்கள் விநியோகிக்க துவங்கியது தமிழக அரசு, விண்ணப்பங்கள் விநியோகிக்க துவங்கியவுடன் குடும்பத் தலைவிகள் அனைவரும் ஆர்வமாக வந்து அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நியாய விலை கடைகளில் கொடுக்க ஆரம்பித்தனர். பின்னர் அந்த பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் நியாய விலை கடைகள் மூலம் அரசுக்கு சென்றடைந்தது.
மொத்தத்தில் தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பயன் பெறுவதற்காக 1 கோடியே 83 லட்சம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.இவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்தப் பணிகள் நிறைவு அடைந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியான பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. பெண்கள் உரிமை தொகை திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 83 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ள நிலையில், சுமார் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்தொடங்கி வைத்த உடன் மறுபுறம் சர்ச்சையும் வெடிக்க துவங்கியது, தொகை வராத பல மகளிர் எனக்கு ஏன் வரவில்லை, நானும் விண்ணப்பம் கொடுத்தேனே? என தங்கள் பகுதியில் வசிக்கும் வங்கியிலும், கிராம நிர்வாக அலுவலர் இடமும், இ சேவை மையத்திலும் சென்று விசாரிக்க துவங்கிட அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தின் பல இடங்களில் குழப்பங்கள் வெடிக்க துவங்கின.
இதன் விபரீதத்தை உணர்ந்து கொண்ட திமுக அரசு எப்படியாவது இதை சரி செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது அப்படி உத்தரவிட்டதன் காரணமாக நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 18 ஆம் தேதிமுதல், விண்னப்பம் நிராகரிப்பு செய்யப்பட்டதற்கான காரணத்துடன் மெசேஜ் அனுப்பப்பட்டது.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் உரிமைத்தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மேல் முறையீடு செய்ய வழங்கப்பட்டு இருக்கும் அதே கால அவகாசத்தில் புதிதாக விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் இவ்வளவுதான் பயனாளிகள் என்ற இலக்கு எதுவும் கிடையாது.
இ சேவை மூலமாக விண்ணப்பிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.இதன் பின்னணியை விசாரித்த பொழுது தமிழகத்தில் இருந்து பல பகுதிகளில் மகளிர் அனைவரும் திமுக அரசின் மீது கோபமாக இருக்கின்றனர் எனவும், இதே கோபம் இன்னும் சில நாட்களில் வரப்போகும் தேர்தல் அளவில் கண்டிப்பாக எதிரொலிக்கலாம் எனவும் சில சீனியர் தலைவர்கள் மூலமாக முதல்வர் ஸ்டாலினுக்கு கொண்டு தகவல் செல்லப்பட்டதாக சில செய்திகள் கசிந்துள்ளன.அதிலும் குறிப்பாக சிலர் முதல்வர் ஸ்டாலினிடம் 'தம்பி இது வேண்டாத வேலை, முதலில் நமக்கு இன்னும் ஐந்து மாதம் தான் இருக்கிறது தேர்தல் வர, இந்த ஐந்து மாதத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகள் நாம் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்து இருக்க வேண்டாம். யோசித்து முடிவு எடுத்துக் கொள்ளுங்கள்' என கூறப்பட்டதாம் இதன் காரணமாக தான் தற்பொழுது இந்த நிராகரிக்கப்பட்டவர்களும் விண்ணப்பம் கொடுக்கலாம் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது எனவும் சில தகவல்கள் கசிந்துள்ளன.