24 special

ஆதிக்க மனப்பான்மை... அதிகாரத் திமிர்... அமைச்சர் பொன்முடியை விளாசிய பாஜக பிரமுகர்!

Ponmodi, bjp
Ponmodi, bjp

திமுக அமைச்சர்களில் சிலரும், முக்கிய நிர்வாகிகள் சிலரது பேச்சும் சமீப காலமாகவே சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக அரசின் சார்பாக பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் மகளிர் இலவசப் பேருந்து பயணத்திட்டத்தை ஓசி டிக்கெட் எனக் குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையையும் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி கிராம சபை கூட்டத்திலும் ஒரு பெண்ணை ஒருமையில் பேசிய காட்சி கண்டனத்திற்குள்ளானது.


எதிர்க்கட்சியினர் சமூக வலைதளத்தில் இதற்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தனர்.இந்நிலையில் திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘’ ஒருபுறம் திமுக தலைவர், மறுபுறம் தமிழ்நாடு முதலமைச்சர் என மத்தளத்திற்கு 2 பக்கமும் அடி என்பதை போல இருக்கிறது என் நிலைமை.

இப்படியான சூழ்நிலையில், மேலும் துன்பப்படுத்துவதைப் போல கழக நிர்வாகிகளோ, மூத்த அமைச்சர்களோ நடந்து கொண்டால் நான் என்ன செய்வது? யாரிடம் போய் சொல்வது? தினந்தோறும் காலையில் நம் கட்சியினர் எந்த புது பிரச்சனையும் உருவாக்கி விடக்கூடாது என்ற நினைப்போடு தான் நான் கண் விழிக்கிறேன். சில சமயங்களில் இது போன்ற விவகாரங்கள் என்னை தூங்கவிடாமல் செய்து விடுகிறது.

என்னுடைய உடம்பைப் பார்த்தாலே உங்களுக்கு தெரியும் என வேதனையில் உருகினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருடைய இந்த பேச்சும் வைரலாக பகிரப்பட்ட நிலையில், திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு சென்னை வேப்பேரி பெரியார் திடலில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு மற்றும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய பொன்முடி ’’ஓசி’’ என பேசியதற்கு மேடையில் வருத்தம் தெரிவித்தார். அதோடு சகஜமாக பேசிய வார்த்தையை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள். உண்மையில் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

’’பொதுக் கூட்டத்திலோ அல்லது வேறு எங்கேயோ வாயா, போயா என்ற வார்த்தையை சொல்லவே தற்போது பயமாக இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தன்னைப் பார்த்து அப்படி பேசாதீர்கள் என்று சொல்லிவிட்டதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.

பாஜக டார்கெட் செய்து தாக்கிக் கொண்டிருக்கிறார்கள் ஸ்டாலின் ஆட்சியில் வேறு எதை வைத்தும் அரசியல் செய்ய இயலாது என்பதால் ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு அதை வைத்து அரசியல் செய்வதாக குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

பொன்முடியின் இந்த வருத்தத்திற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகி நாராயணன் திருப்பதி, ‘’அவரின் உடல்மொழி, முகபாவனையை, நாம் அணுவேனும் ஆதரிக்க கூடாது, அதுவும் மெத்த படித்தவர், மூத்த அரசியல் ஞானமிக்கவர், முனைவர் மாண்புமிகு பொன்முடி, தான் பேசியதை நினைத்து நிச்சயம் அவர் வருத்தப்படவேண்டும், ஏனெனில், அந்த வார்த்தைகள் நம் முதல்வரைக்கூட காயப்படுத்தி இருக்கிறது.

ஆதிக்க மனப்பாண்மையே, அதிகார தோரணையே, மமதையே, தான் என்ற அகம்பாவமே, பணத்திமிரே, 'வாயா, போயா' என்று சொல்ல வைக்கிறது. சகஜம் என்று உணர வைக்கிறது. மற்றவர்களின் மனதை புண்படுத்துவதற்கு பெயர் தான் தீண்டாமை, சமூக அநீதி. செய்வதையெல்லாம் செய்து விட்டு, வருந்துகிறேன் என்று சொல்வது தான் அரசியல். அதுவே  தி.மு.க.வின் கொள்கை.’’ எனத் தெரிவித்துள்ளார்.