சென்னையில் கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரபல ரவுடியை கைது செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில் ஆளுநர் மாளிகை உள்ளது. இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். துப்பாக்கி ஏந்திய போலீஸாரும்அவ்வப்போது நிறுத்தப்பட்டிருப்பார்கள். ஆளுநரை சந்திக்க வெளியாட்களுக்கு அனுமதி இல்லை. அப்படி சந்திக்க அனுமதி பெற்றவர்கள் கூட பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் கிண்டி சர்தர் படேல் சாலை வழியாக நடந்து வந்த இளைஞர் ஒருவர் திடீரென மறைத்து தயாராக கொண்டு வந்த பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகை நோக்கி வீசினார். அது ஆளுநர் மாளிகை நுழைவாயில் (எண் 1) முன்பு போடப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் முன் விழுந்து வெடித்து சிதறி லேசாக தீப்பற்றியது.நல்வாய்ப்பாக அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் யாருக்கும் எந்த வித அசம்பாவிதம் ஏற்படவில்லை.
இதனை கண்ட போலீசார் பெட்ரொல் குண்டு வீசிய நபரை போலீசார் விரட்டி பிடித்தனர். அப்போது அவரிடம் இருந்து மேலும் 2 பெட்ரொல் குண்டுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ‘ஆளுநர் என்னை சிறையில் இருந்து விடுதலை செய்ய ஒப்புதல் வழங்கவில்லை. ‘நீட்’ தேர்வுக்கு ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டுவீசினேன்’ என்று மதுபோதையில் உளறியதாக கூறப்படுகிறது.
விசாரணையில் அந்த நபர் சென்னை நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத்(42) என்பது தெரியவந்தது.இவரின் பின்னணியை விசாரித்த போது, கருக்கா வினோத் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடியாக (சி - பிரிவு) உள்ளார். இவர் மீது ஏற்கெனவே 4 கொலை முயற்சி வழக்கு உள்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு மாம்பலத்தில் உள்ள ‘டாஸ்மாக்’ கடையிலும், 2017-ம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார்.
மேலும், சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த ஆண்டு பிப். 10-ம் தேதி பெட்ரோல் குண்டு வீசிய வழக்கிலும் கைது செய்யப்பட்டிருந்தார். குற்ற வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர்தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.இந்த நிலையில் தான் அவர் மீண்டும் பெட்ரோல் குண்டை கையில் எடுத்துள்ளார். தற்போது அவரை கைது செய்து மீண்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்த நீதிமன்றம். உயர்பதவியில் நாட்டுக்கு ஒரு முக்கிய முடிவு எடுக்கும் ஆளுனருகே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு எந்த அளவிற்கு பாதுகாப்பு இந்த தமிழக அரசு வழங்க முடியும் என்று கேள்வி எழுந்துள்ளது.இதுபோல ரவுடிகள் கஞ்சா வாங்கவும் சரக்கு வாங்கவும் காசு கொடுத்தால் போதும் யார் வீட்டில் குண்டு வீச சொன்னாலும் வீசுவார் என்று கூறப்படுகிறது. மேலும் இவர் யாருடைய தூண்டுதலின் பேரில் இத்தகைய செயலில் ஈடுபட்டார் என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகிறது.