உத்திரபிரதேசம் : கடந்த 2021 ஆகஸ்ட் 15 அன்று ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தேசியக்கொடியை தலைகீழாக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தலைகீழாக ஏற்றிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கறிஞர் எஸ்.கே தியாகி நீதிமன்றத்தில் புகாரளித்தார்.
குஜராத் மாநிலம் புர்காசி தொகுதி ஆர்.எல்.டி கட்சி எம்.எல்.ஏவாக இருப்பவர் அனில்குமார். இவர் கடந்த ஆண்டு சுதந்திரத்தினத்தன்று பெட்ரோல் பல்க் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் தேசியக்கொடியையும் ஏற்றினார். அந்த கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது பின்னர்தான் தெரியவந்தது. அதற்குள் இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் வைரலானது.
அதைத்தொடர்ந்து அனில்குமார் நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரியிருந்தார். ஆனால் வழக்கறிஞர் தியாகி நீதிமன்றத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினரே தேசியக்கொடியை அவமதித்திருப்பது கண்டிக்கத்தக்க செயல். அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிமன்றத்தில் புகாரளித்திருந்தார். அந்த வழக்கு எம்.எல்.ஏ மற்றும் எம்பிகளுக்கான சிறப்புநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணை முசாபர் நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த சிவில் நீதிபதி மயங்க் ஜெய்ஸ்வால் சட்டமன்ற உறுப்பினரான அனில் குமார் மீது வழக்கு பதிவு செய்து ஏழுநாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு புதியமண்டி காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த ஆண்டே மன்னிப்பு கோரிய அனில்குமார் தற்போது மீண்டும் மன்னிப்பு கோரியதோடு சட்ட நடவடிக்கைகளுக்கு தான் கட்டுப்பட்டு நடப்பேன் என்று அரசியலமைப்பை பாதுகாப்பேன் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் முன்ஜாமீன் வாங்க நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக ஆர்.எல்.டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.