ரயில் முன் தள்ளப்பட்டு கல்லூரி மாணவியான இளம்பெண் படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தையே உலுக்கியெடுத்து வருகிறது. பலருக்காகவும் பொங்குபவர்கள் இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்க வாயே திறக்கவில்லை. இந்நிலையில், சத்யா கொலை வழக்கில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிக்கு தண்டனைப் பெற்றுத் தர வலியுறுத்தி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுவுக்கு, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “நேற்றைய முன் தினம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யா என்ற கல்லூரி மாணவி சதீஷ் என்ற இளைஞனால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு, பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அனைவரையும் அதிர்ச்சியிலும், வருத்தத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. இது போன்று நடைபெறும் சம்பவங்கள் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் பொதுவெளியில் பெரும் தலைகுனிவையும் ஏற்படுத்துகிறது. இந்த வழக்கை ரயில்வே துறை போலீஸ் இடமிருந்து சிபிஐசிஐடிக்கு மாற்றி உத்தாவிட்டிருக்கிறீர்கள்; இதை வரவேற்கிறேன். அதே சமயம் இந்த கர்ண கொடூர கொலையின் முக்கியத்துவம் கருதி, சில வேண்டுகோள்களை முன் வைக்கிறேன்.
கொலை மற்றும் பெரும் குற்ற வழக்குகளில் துப்பு துலக்க சில கால அவகாசம் தேவைப்படும். ஆனால், இது பலர் கண்ணெதிரே பட்டப் பகலில் நடைபெற்ற சம்பவம் ஆகும். எனவே, புலன் விசாரணைக்கான கால அவகாசம் அதிகம் தேவைப்படாது என கருதுகிறேன். ஒரு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் குற்றவாளிக்கு அதிகமான தண்டனை பெற்றுத் தருவது இதுபோன்ற குற்றச் செயல்களைச் செய்ய எத்தனிப்போருக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். என்பதற்காகவே.
பல நேரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கே பல மாதங்களும், ஆண்டுகளும் ஆகிவிடுகின்றன. மேலும், வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்து, அந்த வழக்கை நடத்தி முடிக்கின்ற பொழுது, இன்னும் கூடுதலாக பல ஆண்டுகளும் ஆகி, பலருக்கு இது என்ன சம்பவம் என்று கூட மறந்து போய் விடுகிறது.
ஒரு கல்லூரி மாணவி கல்லூரி தனது உயிரை இழந்தது மட்டுமல்ல, இப்பொழுது அவர் தந்தையும் உயிரிழந்துள்ளார். ஒரு குடும்பமே சோகத்திற்கு ஆளாகி இருக்கிறது. எதிர் தரப்பினரின் விருப்பங்களைக் கணக்கிலே கொள்ளாமல் தாங்கள் விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்ற இளைஞர்கள் இது போன்ற மூர்க்கத்தனமான, மிருகத்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
மதுப் பழக்க வழக்கங்களும், அண்மை காலமாக அதிகரித்து வரும் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்க வழக்கங்களும், ஏற்கனவே நல்ல கல்வியோ, முறையான வழிகாட்டுதலோ இல்லாமல் இருக்கக் கூடிய இளைஞர்கள் எளிதாக இரையாக்கி இது போன்ற காட்டுமிராண்டி செயல்களில் ஈடுபட வைக்கிறது.
சதீஷ் மீதான குற்றப் பத்திரிக்கையை விரைந்து தாக்கல் செய்து, சிறிதும் காலம் தாழ்த்தாமல் வழக்கை விரைவு நீதிமன்றத்தின் மூலமாக, ஓரிரு வாரங்களுக்குள் நடத்தி, உரிய தண்டனை பெற்றுத் தருவதே முறையற்ற செயல்களில் ஈடுபட்டால் என்ன நடக்கும் என்பதை இன்றைய இளைஞர் சமுதாயம் உணர்ந்து கொள்ள வழி வகுக்கும். இதுபோன்று விரைந்து நடத்தி, தண்டனை பெற்றுக் கொடுத்த முன்னுதாரணங்கள் உண்டு. தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் மிகவும் அக்கறை கொண்ட தாங்கள் தேவைப்பட்டால் அரசிடம் இதற்கென்று தனியாக அரசாணை பெற்று இந்த வழக்கை விரைந்து நடத்தி ஒரு புதிய வரலாற்றை உருவாக்க வேண்டும் என்றும், இவ்வழக்கில் கிடைக்கும் தண்டனை தறி கெட்டுத் திரியும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைய உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கவும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.
அவரே தனது ட்விட்டர் தளத்தில், ‘’சுவாதி கொலை குற்றவாளி மின் வயரைக் கடித்து மாண்டு போனான்.சத்யா கொலை பலரது கண்ணெதிரே நடந்த கர்ண கொடூரம்.கண்ணெதிரே கண்டவர், கேள்விப்பட்டு கண்கலங்கியோர் மறந்து போகும் முன், அவனும் மின் வயர் கடித்து மரணிக்கும் முன், விசாரணை தொடங்கட்டும்; கடும் தண்டனை நிறைவேறட்டும்’’எனத் தெரிவித்துள்ளார்.