24 special

கூட்டத்தொடர் அறிவிப்பால் பதைபதைத்து கிடைக்கும் அரசியல் கட்சிகள்...!

pm modi, soniyagandhi
pm modi, soniyagandhi

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து தேசிய அரசியலில் பதைபதைப்பும் பரபரப்பும் அதிகரித்திருக்கிறது.நாடாளுமன்றத் தேர்தலுக்கு எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில், இந்தக் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது. மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்பாகவே நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்துவிட்டார் என்றாலும், தற்போது இருக்கும் நாடாளுமன்ற கட்டடத்திலேயே மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றது.முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி எதற்காக இந்த சிறப்பு கூட்டத் தொடர் என கேட்டிருந்தார். 


புதிய கட்டடம் முழுமையாகத் தயாராகாத காரணத்தால், இப்போதிருக்கும் கட்டடத்திலேயே கூட்டம் நடைபெறுகிறது என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது புதிய கட்டடம் கூட்டம் நடத்துவதற்கு முழுமையாகத் தயாராகிவிட்டது என்று செய்திகள் கூறுகின்றன. ஆனாலும், செப்டம்பர் 18-ம் தேதி பழைய கட்டடத்திலேயே சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கும் என்றும், அதன் மறுநாள் விநாயகர் சதுர்த்தி அன்று புதிய கட்டடத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான மசோதா கொண்டுவரப்படும் என்பதால், முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்கிற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்திருக்கிறது. இந்த நிலையில், மக்களவை, மாநிலங்களவை எம்.பி-க்கள் அனைவரையும் வைத்து குழு புகைப்படங்கள் எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

வழக்கமாக, எம்.பி-க்களின் குழு புகைப்படங்கள் அவர்களின் பதவிக் காலத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் எடுக்கப்படும். ஆகையால், வரும் சிறப்புக் கூட்டத்தொடர், நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டமாகக்கூட இருக்கலாம்... அதற்கான அறிகுறியாக குழு புகைப்படம் எடுக்கும் முடிவு தெரிகிறது என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது.நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது முக்கியப் பிரச்னைகளைக் கையிலெடுத்து போராடுவதை எதிர்க்கட்சிகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. அந்தச் சூழலைப் பயன்படுத்தி, பல்வேறு மசோதாக்களை மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றி வருகிறது என கூறுகின்றனர். அதைப்போல, தற்போது நடைபெறவிருக்கும் சிறப்புக் கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்றப்போகிறார்கள் என்கிற பேச்சும் எதிர்கட்சிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நாட்டின் பெயரை ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ’பாரத்’ என்று மாற்றுவதற்கான முயற்சியில் மத்திய பா.ஜ.க இறங்கியிருக்கிறது என்ற பேச்சும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. டெல்லியில் நடைபெறவிருக்கும் ஜி 20 மாநாட்டுக்கான அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக, பாரத குடியரசுத் தலைவர் என்று அச்சிட்டிருக்கிறார்கள்.

இதுதான், தற்போது எழுந்திருக்கும் சர்ச்சைக்கு காரணம் என கூறப்படுகிறது.பொது சிவில் சட்டம் கொண்டுவருவது பற்றியும் சமீபகாலமாக பா.ஜ.க அதிகம் பேசிவருகிறது. அயோத்தியில் ராமர் கோவில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் என்கிற பா.ஜ.க-வின் நீண்டகால அரசியல் செயல்திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதில், பொது சிவில் சட்டம் பாக்கி இருக்கிறது. அதை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே நிறைவேற்றிவிட பா.ஜ.க யோசித்துவருகிறது என்றும், வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் அதற்கு தேவையான நடவடிக்கைகளை பா.ஜ.க அரசு மேற்கொள்ளும் என்ற பேச்சும் அடிபடுகிறது. இவற்றையெல்லாம் கண்டு மொத்த I.n.d.i.a கூட்டணியும் நடுங்கிப் போய்தான் உள்ளது. போதாக்குறைக்கு உதயநிதி கிளப்பிய சனாதன சர்ச்சை, நாடு முழுக்க, பிரதமர் மோடிக்கு எதிரான எதிர்கட்சிகளின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது.