
ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் தற்போது 48 மணி நேரம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசு, இந்தியாவுக்காக மறைமுக போரில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காவ்ஜா ஆசிப் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
பாதுகாப்புத் துறையில் பாகிஸ்தான் இந்தாண்டு மிக மோசமான தோல்விகளைச் சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவிடம் அடி வாங்கிய பாகிஸ்தான் இப்போது தாலிபான்களிடமும் அடி வாங்கி போர் நிறுத்தம் செய்யக் கோரிக்கை விடுத்துள்ளது. எல்லா இடங்களிலும் சுற்றிச் சுற்றி அடிவாங்கும் அளவுக்கே பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை இருக்கிறது.
ஒரே நாளில் இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றாலும் இந்தியா அடைந்த வளர்ச்சியைப் பாகிஸ்தானால் அடைய முடியவில்லை. பொருளாதார ரீதியாகத் திணறும் பாகிஸ்தான், பல உலக நாடுகளிடம் கடன் வாங்கி மோசமான நிலையில் இருக்கிறது.
இந்தாண்டு பாதுகாப்புத் துறையிலும் பாகிஸ்தான் எந்தளவுக்குப் பலவீனமாக இருக்கிறது என்பதும் உலகிற்குத் தெரிந்துவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவை அத்துமீறி பாகிஸ்தான் தாக்க முயன்றது. அதாவது பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதலில் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்திய ராணுவத்தின் வெற்றியைப் பொறுத்துக் கொள்ளாத பாகிஸ்தான், அத்துமீற முயன்றது. ஆனால், இந்திய பாதுகாப்புப் படைகள் அந்த தாக்குதல்களைத் துல்லியமாக முறியடித்தது. மறுபுறம் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை ஆரம்பித்தது. பல முக்கிய இடங்களைத் தாக்கியது. குறிப்பாகப் பாகிஸ்தான் ராணுவ தளமான ராவல்பிண்டி ராணுவ முகாமை கூட இந்தியா தாக்கியது. ஆனால், பாகிஸ்தானால் எதையும் தடுக்க முடியவில்லை.
இதனால் வேறு வழியே இல்லாமல் பாகிஸ்தான் சரணடைய இந்தியாவிடம் கோரிக்கை வைத்தது. அதை இந்தியாவும் ஏற்கப் பாகிஸ்தான் தப்பியது.போரில் வெற்றி என தனது சொந்த நாட்டு மக்களைப் பாகிஸ்தான் ஏமாற்ற முயன்றது. ஆனால், இப்போது ஆப்கானிஸ்தானுடன் வெடித்த மோதலில் பாகிஸ்தான் பலம் அம்பலப்பட்டுவிட்டது. பாகிஸ்தானில் உள்ள ஷெரீப் அரசுக்கு பாகிஸ்தான் தாலிபான் (சுருக்கமாக டிடிபி) தலைவலியாக மாறியுள்ளது. டிடிபி தீவிரவாதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாக்குதல் நடத்தியது. அதற்கு ஆப்கானிஸ்தானும் பதிலடி கொடுக்கவே நிலைமை மோசமானது.
கடந்த சில நாட்களில் மட்டும் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 58 பாகிஸ்தான் ராணுவ படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 20 பாகிஸ்தான் செக்யூரிட்டி போஸ்ட்கள் அழிக்கப்பட்டுள்ளன. நிலைமை இந்தளவுக்கு மோசமானதால் பாகிஸ்தான் போர் நிறுத்தம் கோரியதாகவும் அதன்படி தாக்குதலை நிறுத்துவதாகவும் தாலிபான்கள் அறிவித்துள்ளன. இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் பேண்ட்டை உருவி அதை வைத்து தாலிபான்கள் ஊர்வலமும் நடத்தியுள்ளன. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை எந்தளவுக்குப் பலவீனமாக இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.. தாலிபான்களைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் தவிக்கிறது. தாலிபான் மட்டுமின்றி பாகிஸ்தானில் பலூச் போராளிகளையும் கூட அழிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறுகிறது. இது அந்நாட்டின் ராணுவ பலத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இதற்கிடையே போர் நிறுத்தம் நீடிக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது, ஏனெனில், ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசு டெல்லி ஆதரவுடன் முடிவுகளை எடுக்கிறது. தற்போது, காபூல் (ஆப்கானிஸ்தான்) டெல்லியின் மறைமுக போரை நடத்தி வருகிறது. தாலிபானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி, தனது ஆறு நாள் இந்தியப் பயணத்தின் போது சில மறைமுகமான "திட்டங்களை" வகுத்துள்ளார்.வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகளை மையப்படுத்தி இந்தியாவுக்கு சென்றதாக கூறினாலும் மறைமுக திட்டங்கள் வகுக்கப்பட்டு இருப்பதாக சூசகமாக கூறினார்.