டெல்லி போலீஸ் எடுத்த நடவடிக்கை ஒட்டுமொத்த நாட்டில் உள்ள ஊடகங்களையும் குறிப்பாக சீனா ஆதரவு நபர்களையும் ஒரே இரவில் மிரள செய்து இருக்கிறது.நியூஸ்கிளிக் நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று செயல்பட்டுவந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூஸ்கிளிக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது. அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்புக் கோரி நியூஸ் கிளிக் நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மீதும், அதன் ஆசிரியர் பிரபீர் புர்கயாஷ்தா மீதும் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக நியூஸ்கிளிக் விவகாரத்தில் அமலாக்கத் துறை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் இருந்தது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் ‘நியூஸ்கிளிக்’ நிறுவனத்துக்கு சீனாவிடமிருந்து நிதி வருகிறது என்று செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை ‘நியூஸ்கிளிக்’ நிறுவனம் மீதான தனது விசாரணையை தீவிரப்படுத்தியது.மேலும், நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக் கோரி அமலாக்கத் துறை, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அமலாக்கத் துறையின் மனு தொடர்பாக பதிலளிக்கக் கோரி நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கும், அதன் நிறுவனரும் முதன்மை ஆசிரியருமான பிரபீர் புர்கயாஷ்தாவுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்தச் சூழலில் அமலாக்கத் துறை தகவல்களின் அடிப்படையில் டெல்லி போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், டெல்லி காவல் துறையின் சிறப்பு போலீசார், நியூஸ்கிளிக் நிறுவனத்துடன் தொடர்புடைய 30 இடங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.
இந்நிறுவனத்தில் பணிபுரியும் 6 பத்திரிகையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் லேப்டாப், மொபைல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு டெல்லி போலீசார் சீல் வைத்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், "விசாரணை அமைப்புகள் தங்கள் பணியை செய்கின்றன. ஆதாரம் மற்றும் புகாரின் அடிப்படையில்தான் போலீசார் இந்த சோதனையை நடத்துவார்கள்" என தெரிவித்துள்ளார்.ஒரு ஊடகம் தற்போது முழுமையாக சிக்கி இருப்பதாகவும் வரும் நாட்களில் முன்னணி ஊடகங்களும் பல முன்னணி பத்திரிகையாளர்களும் இந்த விவகாரத்தில் வலுவாக சிக்குவார்கள் என அடித்து கூறுகின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.