நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின விழாவின் உரையில் விஸ்வகர்மா யோஜனா என்னும் புதிய திட்டத்தை அறிவித்து அதில் லட்சக்கணக்கான கைத்தொழில் கலைஞர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்திருந்தார். அதாவது இந்த திட்டத்தின் கீழ் சுமார் 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பாரம்பரிய திறமைகளை கொண்ட நபர்களுக்கு அவர்களின் தொழிலுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நிதி வழங்கப்படும், இதன் மூலம் அவர்களது வாழ்க்கை தரம் உயரும் என்றும் தெரிவித்திருந்தார். அதன் முதல் கட்டமாக 18 தொழில் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் இத்திட்டத்தின் கீழ் பயிற்சிகளும் வழங்கப்படுவதாகவும் அத்தகைய பயிற்சிகளை பெறுபவர்களுக்கு ரூபாய் 500 உதவித்தொகையாக பயிற்சி நாட்களில் தினமும் வழங்கப்படும் என்றும், தொழிலை நடத்துவதற்காக மூலதனங்களை வாங்குவதற்கு 15 ஆயிரம் வரை நிதி உதவி வழங்கப்படும் என்றும் 30 லட்சம் குடும்பங்கள் ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என்றும் மத்திய அரசு தரப்பில் இருந்து அறிவிப்புகள் வெளியாகி இருந்தது.
ஆனால் இந்த திட்டம் குல கல்வி முறையை பின்பற்றுவதாக அமைந்துள்ளதாகவும் தனது அப்பா செய்த தொழிலே தான் மகன் செய்ய வேண்டும் என்பதை இது ஆதரிக்கிறது என்ற கருத்துக்களை முன்வைத்து எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இத்திட்டத்திற்கான வரவேற்புகள் மக்கள் மத்தியில் அதிகரித்தது மேலும் இந்த திட்டம் தொடங்கப்படும் நாள் அன்று நாடு முழுவதும் இருக்கும் கைத்தொழில் கலைஞர்களை நேரில் அழைத்து பிரதமர் இந்த திட்டத்திற்கான சான்றிதழை ஒவ்வொருவரிடமும் வழங்கியது சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இந்த திட்டம் தொடங்கப்பட்ட அடுத்த பத்து நாட்களுக்குள் 1.40 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய குரு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நாராயணன் ரானே தெரிவித்தார். மேலும் அவர் 'பிரதமர் மோடி தொடங்கி வைத்த விஸ்வகர்மா திட்டம் என்பது அவரின் தொலைநோக்கு பார்வையின் விளைவு அதன் மூலமே இந்த திட்டம் தொடங்கப்பட்ட 10 நாட்களுக்குள் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை பெற்றுள்ளது' என்று வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் விஸ்வகர்மா திட்டத்தை மையப்படுத்தி ஒரு நிகழ்வை பாஜகவினர் நடத்தியுள்ளனர். அதாவது கோவை மாவட்டம் ஆர் எஸ் புரம் அருகில் பொன்னையராஜபுரம் கிருஷ்ணா பேக்கரியில் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் இணைந்து கொள்வதற்கு கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி 'ஒரு நாள் முகாம்' அமைக்கப்பட்டுள்ளது அந்த ஒரே நாளில் மக்களின் ஆதரவு பெருகியதால் தற்போது மேலும் ஒரு நாள் இந்த முகாம் நடத்தப்பட்டு உள்ளதாகவும் இதுவரை சுமார் 1345 பேர் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர் என்றும் பாஜக நிர்வாகி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.விஸ்வகர்மா திட்டத்தின் அறிவிப்பை வைத்து அரசியல் செய்து சாதி ரீதியான பிரச்சனையை தூண்டுவதற்கு திட்டமிட்ட திமுகவிற்கு இது பேரிடியாக அமைந்து விட்டது என கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. விஸ்வகர்மா திட்டத்தை திமுக எந்த அளவிற்கு எதிர்த்ததோ அத்திட்டத்திற்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு அதைவிட அதிகமாகிக் கொண்டே செல்கிறது என்பது இந்த நிகழ்வு மூலம் உறுதியாகி உள்ளது எனவும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி விஸ்வகர்மா திட்டத்திலும் நமக்கு பின்னடைவா என அறிவாலய வட்டாரங்கள் புலம்பலில் இருந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.