2014 இல் இருந்து 10 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றியை நிலைநாட்டி வந்ததால் அந்த ஒரு கட்சியை எதிர்த்து ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இண்டியா என்ற ஒரு கூட்டணியை உருவாக்கினார்கள். அந்த கூட்டணியில் பல மோதல்கள் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்க உள்ளதாக கூறியது மேலும் பல நடவடிக்கைகளையும் அவசர அவசரமாக இக்கூட்டணி மேற்கொண்டது. ஆனால் தேர்தல் நெருங்கும் சமயத்திலே இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக உடைய ஆரம்பித்தது அதில் பீகார் முதல்வர் நிதீஷ் எடுத்த நடவடிக்கை இண்டி கூட்டணியிடையே பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இதனை அடுத்து லோக்சபா தேர்தலும் விறுவிறுப்பாக நடந்து முடிய அதற்கான முடிவுகளும் கடந்த ஜூன் நான்காம் தேதி வெளியானதை அடுத்து மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதனால் ஒரு கட்சியை எதிர்த்து ஒட்டுமொத்த இந்தியாவே சேர்ந்து கூடிய கூட்டணி பயனில்லாமல் போனது என பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெளியான 2 நாட்களில் ஒரு புதிய பிரச்சினையை காங்கிரஸ் சந்திக்க உள்ளது. அதாவது தேர்தலுக்கு முன்பாக பிரச்சாரத்தின் பொழுது காங்கிரஸ் தனது 25 உத்தரவாதங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சுமார் 8 கோடி வீடுகளுக்கு சென்று குடும்ப தலைவிகளிடம் உத்திரவாத அட்டைகளை வழங்கி தனக்கு சாதகமான ஆதரவை தேடியது. அந்த உத்தரவாத அட்டையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒரு லட்சம் அதாவது மாதம் ரூபாய் 8500 குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் என ஒரு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து உத்திரபிரதேசத்தில் இண்டி கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகளில் குடும்ப தலைவிகள் காங்கிரஸ் அலுவலகம் முன் நின்று உத்தரவாத அட்டையை காண்பித்து மகாலட்சுமி திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளும்படி நெடுநேரம் வரிசையில் காத்து வருகின்றனர். மேலும் லக்னோவில் உள்ள பெண்கள் காங்கிரஸ் கட்சியினர் அளித்த உத்தரவாத அட்டையுடன் காங்கிரஸ் அலுவலகம் முன் வந்த நின்று பணம் பெறுவதற்கான வங்கி விவரங்களையும் அளித்துள்ளனர். சிலர் ரசீதுகளை பெற்றதாகவும் கூறுகின்றனர் பலர் நெடுநேரம் வரிசையில் நிற்கிறோம் என்பதையும் கூறுகின்றனர். ஆனால் இந்த திட்டம் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை இண்டி கூட்டணி உடனடியாக தீவிர படுத்தாமல் இருந்தால் குடும்ப தலைவிகளின் கோபத்திற்கு நிச்சயம் ஆளாகுவார்கள் என அரசியல் விமர்சனங்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஏனென்றால் தமிழகத்தில் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக கொடுத்துவிட்டு ஆட்சி பொறுப்பை ஏற்று இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதிலும் பல நடைமுறைகளை விதித்து அந்த திட்டத்தை செயல்படுத்தியது. இதனால் பல குடும்ப தலைவிகள் திமுக மீது அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த அதிருப்திகளை லோக்சபா தேர்தலின் பிரச்சாரத்தின் போது குடும்ப தலைவிகள் வெளிகாட்டினர். அப்படி இருக்கும் பொழுது காங்கிரஸ் தனது உத்தரவாத அட்டையில் மாதம் 8,500 கொடுப்பதாக அளித்த உத்தரவாதம் மட்டும் இழுத்தடிக்கப்பட்டால் அது காங்கிரசிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது