கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையம் காட்டூர் பகுதியில் சேர்ந்த தொழிலதிபரான பிரகாஷ் தோரணக்கல்லுப்பட்டியில் உள்ள தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்க நிலத்தை முன்னால் அதிமுக அமைச்சரான எம் ஆர் விஜயபாஸ்கர் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி போலி ஆவணங்களை கொடுத்து தனது ஆதரவாளர்களின் பெயர்களில் பத்திரப்பதிவு செய்து விட்டதாக கடந்த ஜூன் 14ஆம் தேதி அன்று கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் போலியாக ஆவணங்களை கொடுத்து எம்ஆர் விஜயபாஸ்கர் பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும், அவரது ஆதரவாளர்கள் தன்னை கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்து வருவதாகவும் புகார் மனு அளித்தார். இந்த இரண்டு புகார்களையும் அடிப்படையாக வைத்து கரூர் நகர காவல் நிலையத்தில் சார்பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரவீன், யுவராஜ், ரகு, சித்தார்த்தன், மாரப்பன் மற்றும் செல்வராஜ் உள்ளிட்ட ஏழு பேர் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளித்த தொழில் அதிபர் பிரகாஷ் வாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வாங்கல் காவல் நிலையத்தில் மேற்படி ஏழு நபர்கள் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் இந்த வழக்குக் கடந்த 14ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனைத் தெரிந்து கொண்ட விஜயபாஸ்கர் தலைமறைவாக, சிபிசிஐடி போலீசார் ஐந்திற்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து விஜயபாஸ்கரை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அவர் திண்டுக்கல், கேரளா மற்றும் வடமாநிலங்களில் பதுங்கி இருப்பதாக பல தகவல்கள் வெளியானதை தொடர்ந்து அங்கெல்லாம் சிபிசிஐடி போலீசார் பயணித்து வந்தனர். அதுமட்டுமின்றி கரூரில் உள்ள அவரது ஆதரவாளர்களின் வீடுகளிலும் இரு முறை சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினார்.
அதுமட்டுமின்றி ஒரு பக்கம் தலை மறைவாக இருந்து கொண்டு முன் ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் எம்ஆர் விஜயபாஸ்கர் தரப்பில் முன்ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. மூன்று முறை விஜயபாஸ்கர் தரப்பில் முன்ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போதும் அவை அனைத்தும் தள்ளுபடி ஆக இறுதியாக எம் ஆர் விஜயபாஸ்கர் தரப்பு முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மீதான விசாரணை நடந்த பொழுது விஜயபாஸ்கரின் ஆதரவாளர் நீதிமன்றத்தில் இருந்து கொண்டே விஜய் பாஸ்கருக்கு லைவ் ஷோ காட்டிய விவகாரம் வேறு பெருமளவில் பரபரப்பானது.
இந்த நிலையில் எம் ஆர் விஜயபாஸ்கரை தேடிக் கொண்டிருந்த சிபிசிஐடி போலீசாரிடம் எம் ஆர் விஜயபாஸ்கர் கேரளா எல்லையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்று அதிரடியாக கைது செய்துள்ளனர். இவருடனே விஜயபாஸ்கருக்கு உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் பிரிதிவிராஜையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட உடனே கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வீட்டில் நள்ளிரவில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து நீதிபதியின் உத்தரவின் பேரில் இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே தோல்வியை சந்தித்து வருகின்ற அதிமுகவிற்கு தனது நிர்வாகி ஒருவர் நிலமோசடியில் ஈடுபட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது அதிமுக தரப்பை சுணக்கம் அடைய செய்துள்ளது. மேலும் இந்த விவகாரம் அதிமுக தொண்டர்களிடையேவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கைது செய்த சமயம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எவ்வளவு கெஞ்சியும் போலீசார் விடவில்லை எனவும் சில தகவல்கள் கசிகின்றன...