70 ஆண்டுகளாக வரலாற்றைக் கொண்ட காங்கிரஸ் கட்சி மத்தியில் தனது செல்வாக்கை இழந்தது போல், விரைவில் தமிழகத்திலும் திமுக அழியும் என பாஜகவின் முக்கிய நிர்வாகியான அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஊழலற்ற ஆட்சி மற்றும் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதால் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. நடக்க உள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலில் கூட பாஜக தான் வெற்றி பெறும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் மற்றொருபுறம் உட்கட்சி பூசல் மற்றும் கட்சித் தாவலுக்கு பெயர் பெற்ற காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிலும் மெல்ல மெல்ல தனது செல்வாக்கை இழந்து வருகிறது. அதேபோல் போலி சிந்தாந்தங்களைக் கொண்டு மக்களை ஏமாற்றி வரும் திமுக விரைவில் அழியும் என பாஜக இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறை பிரிவின் மாநில தலைவராக உள்ள அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பிரபல யூ-டியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், திமுக கடவுள் கிடையாது என்ற ஒரே கொள்கையை வைத்து ஆட்சி நடத்துகிறது. சமூக நீதி பற்றியெல்லாம் திமுகவிற்கு எந்த கவலையும் கிடையாது. வெறும் கொள்கையை வைத்து மட்டும் எதுவும் செய்ய முடியாது. உள்கட்டமைப்பு, நீர்வளம், சுகாதாரத்துறை,விளையாட்டு போன்ற துறைகளில் என்னென்ன மாதிரியான முன்னேற்றங்களை திமுக கொண்டு வந்துள்ளது என பார்க்க வேண்டும்.
இப்போது இருக்கும் இளைஞர்களிடம் திமுக கொள்கைகள் எல்லாம் செல்லுபடியாகாது. அவர்கள் வேலை வாய்ப்பை எதிர்பார்க்கிறார்கள். மத்திய அரசு தற்போது 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க உள்ளது. இரண்டாம் கட்டமாக 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் திமுக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது.
அதேபோல் மோடி அரசைப் பார்த்து நீங்கள் என்ன சொல்ல முடியும். பாஜகவில் ஊழல் செய்பவர்கள் கிடையாது. அப்படி யாராவது இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை பாயும். ஆனால் திமுகவில் அப்படி எதையாவது சொல்ல முடியுமா?. ஏனெனில் காசு சம்பாதிக்க வேண்டும் என்றால் பல வழிகள் உள்ளது. ஆனால் மக்கள் அன்பைச் சம்பாதிக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம் எனத் தெரிவித்தார்.
பாஜக என்றாலே இந்துத்துவா என்ற தவறான கருத்து மக்களிடையே பரப்பப்படுகிறது. ஆனால் எங்களுடைய பயிற்சி வகுப்பிற்கு ஒருநாள் வந்து பாருங்கள். அப்போது தான் எப்படிப்பட்டவர்கள் என்பது தெரியும். அந்த பயிற்சி முகாம்களில் சமூக நீதி, சாதிப்பாகுபாடு, பாலின சமத்துவம், சிறுபான்மையினர் பாதுகாப்பு, தீண்டாமை ஆகியவற்றைப் பற்றி பயிற்சி அளிக்கிறோம். அங்கேயே சாதி, மதபேதமின்றி தரையில் ஒன்றாக படுத்துறங்கி பயிற்சி எடுக்கிறோம். அதனால் தான் பாஜக வலிமையாக இருக்கிறது.